`அன்புமணிக்கு சமூக நீதி குறித்து வகுப்பெடுக்கணும்' - வன்னியரசு ஆதங்கம் | vanni arasu slams anbumani

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (10/01/2019)

கடைசி தொடர்பு:17:00 (10/01/2019)

`அன்புமணிக்கு சமூக நீதி குறித்து வகுப்பெடுக்கணும்' - வன்னியரசு ஆதங்கம்

`சபரிமலைக்குப் பெண்கள் செல்லக்கூடாது என்ற ஐதீகத்தை ஆதரித்துப் பேசியவர்தான் அன்புமணி. (முதலில் அன்புமணிக்கு யாராவது சமூகநீதி தொடர்பாகவும் சனாதனம் தொடர்பாகவும் வகுப்பெடுத்தால் நல்லது)' என வன்னியரசு விமர்சித்துள்ளார்.

வன்னியரசு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு வெளியிட்ட அறிக்கையில், ``முன்னேறிய உயர் வகுப்பினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டு மசோதா இரு அவையிலும்  நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் அ.தி.மு.க உறுப்பினரும் மூத்த தலைவருமான தம்பிதுரை கடுமையாக இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் பேசினார். ஆனால், வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. அதேபோல பாட்டாளி மக்கள் கட்சியின் ஒற்றை உறுப்பினர் அன்புமணிகூட எதிர்த்து வாக்களிக்காமல் வெளியே ஓடிவிட்டார். வெளியே பேசுவது சமூகநீதி, ஆனால் சட்டமியற்றும் அவையில் பா.ஜ.கவோடு மறைமுக கூட்டு சேர்ந்து சமூகநீதிக்கு எதிராக செயல்பட்டுள்ளார். ஏற்கெனவே, சபரிமலைக்குப் பெண்கள் செல்லக்கூடாது என்ற ஐதீகத்தை ஆதரித்துப் பேசியவர்தான் அன்புமணி. (முதலில் அன்புமணிக்கு யாராவது சமூகநீதி தொடர்பாகவும் சனாதனம் தொடர்பாகவும் வகுப்பெடுத்தால் நல்லது). இது இப்படி இருக்க, மாநிலங்களவையில், இந்த இட ஒதுக்கீட்டு மசோதாவுக்கு எதிராக, தி.மு.க உறுப்பினர் கனிமொழி கடுமையாகப் பேசினார். இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பி விவாதிக்க கேட்டுக்கொண்டார்.

அன்புமணி

ஆனால், கனிமொழியின் குரல் அங்கு எடுபடவே இல்லை. அதைவிடக் கொடுமை, இடதுசாரிகள் தமக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்திருக்கும் வேளையில், மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினரான டிகே.ரங்கராஜன் மசோதாவை ஆதரித்துப் பேசினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் ஆம் ஆத்மி கட்சியுமே கனிமொழியின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக நின்றது. சமூக நீதிக்கொள்கையை குழிதோண்டிப் புதைக்கவும் இடஒதுக்கீட்டுக்கொள்கையையே அழித்தொழிக்கும் முயற்சியில் ஈடுபடும் பா.ஜ.க-வின் சதித்திட்டத்தை மார்க்சிய கம்யூனிஸ்டுகளும் ஆதரிப்பது எதிர்காலத்துக்கு ஆபத்தானதாக அமைந்துவிட்டது.

காங்கிரஸ் கட்சியும் பா.ஜ.க-வோடு இணைந்து இந்த மசோதாவை ஆதரித்து வாக்களித்து விட்டது. இப்போது, பா.ஜ.க வகுத்தளித்த பாதையில்,  காங்கிரஸ் கட்சியும் மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சியும் பயணிப்பது ஜனநாயகத்துக்கும் அரசியலமைப்புச் சட்டத்துக்கும் பேராபத்தாக அமைந்துவிட்டது. பொருளாதாரக் கொள்கைகளும் சமூகநீதிக் கொள்கைகளும் பா.ஜ.க-வுக்கும் இடது சாரிகளுக்கும் ஒன்றுதானா. மாற்றுக்கொள்கைகள் இல்லையா. வர்க்க பார்வையும் வருண பார்வையும் ஒன்றாக இருக்கிறதே" என்று தெரிவித்துள்ளார்.