அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கமிட்டியை நாங்களே நியமிப்போம்! - உயர் நீதிமன்றம் அதிரடி | Madurai HC bench will appoint Avaniyapuram Jallikattu administration committee

வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (10/01/2019)

கடைசி தொடர்பு:19:40 (10/01/2019)

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கமிட்டியை நாங்களே நியமிப்போம்! - உயர் நீதிமன்றம் அதிரடி

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கமிட்டியை நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் குழு நியமிக்கும் என்று உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு

மதுரையில் அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டுக்கு அடுத்தபடியாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு புகழ்பெற்றது. தை முதல் நாள் நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு பெரிய அளவில் சிறப்பாக நடைபெறும். இந்த நிலையில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்குப் பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக சர்ச்சை நிலவிவந்தது. தென்கால் பாசன விவசாயிகள் என்ற பெயரில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் முறைகேடுகள் செய்வதாக புகார்கள் எழுந்தன. இந்த நிலையில் இந்தாண்டு பல்வேறு தரப்பினரும் பல்வேறு புகார் மனுக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்துவந்தனர். 

 

காளையை அடக்கும் வீரர்கள்

இந்த நிலையில், அனைத்து சமூகத்தினரையும் சேர்ந்த குழுவை அமைத்து ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும். ஒரே சாதி ஆதிக்கம் இருக்கக் கூடாது'' எனக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் 14 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தும் ஒன்றாக இணைக்கப்பட்டது. இந்த  வழக்கு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, போராடி பெறப்பட்ட ஜல்லிக்கட்டு தற்போது யார் நடத்துவது என்று பிரச்னை ஏற்பட்டுள்ளது என்று கூறிய நீதிபதிகள், இது தொடர்பாக ஜல்லிக்கட்டு பாதுகாப்பு கொடுப்பது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், மாநகர காவல்துறை ஆணையர் உடனடியாக ஆஜராக உத்தவிட்டனர்.

மேலும், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக உயர் நீதிமன்றமே ஆணையர் குழு அமைக்கும் என்றும் இந்தக் கமிட்டியில் யார், யார் இடம்பெறுவார்கள் என இந்தக் குழு முடிவு செய்யும் என்றும் ஜல்லிக்கட்டு சம்பந்தமாக ஆலோசனைகளை மட்டுமே கூறலாம் என்றும் யார் யார் ஆணையர் என்றும் விரிவான உத்தரவை இன்று மாலைக்குள் நீதிமன்றம் அறிவிக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.