கால் மட்டுமே கிடந்தது; உடலைக் காணோம்!- பாண்டூர் இளைஞர் கொலையா, விபத்தா? திணறும் போலீஸ் | Pandur youth's dead body is missing. Police under confusion.

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (10/01/2019)

கடைசி தொடர்பு:18:00 (10/01/2019)

கால் மட்டுமே கிடந்தது; உடலைக் காணோம்!- பாண்டூர் இளைஞர் கொலையா, விபத்தா? திணறும் போலீஸ்

திருவள்ளூர் அருகே சாலை விபத்தில் இறந்த இளைஞரின் வலது கால் மட்டுமே கிடந்தது. உடல் காணாமல் போனதால் இளைஞர் விபத்தில் உயிரிழந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது தெரியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.

இளைஞரின் உறவினர்கள்

திருவள்ளூர்- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் நேற்றிரவு பத்தரை மணியளவில் பாண்டூர் என்ற கிராமத்தின் அருகில் சாலை விபத்தில் அத்திப்பட்டு என்ற கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் என்பவர் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இறந்துபோன சுதாகரின் வலது கால் மட்டும் ரோட்டில் கிடந்தது. ஆனால், உடலின் எந்தப் பாகமும் அந்தப் பகுதியில் இல்லை. இதனால் போலீஸாருக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சாலை விபத்தில் இறந்திருந்தால் உடலின் மற்ற பாகங்கள் அருகில் கிடந்திருக்கும். ஆனால், மற்ற பாகங்கள் இல்லாதது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது காவல்துறைக்கு.

பலியான இளைஞர்

விபத்து நடந்த நேரத்தில் அந்தப் பகுதி வழியாக ஆந்திரா, ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பதிவெண் கொண்ட இரண்டு கண்டெய்னர் லாரிகள் சென்றுள்ளன. அந்த லாரியின் உட்பகுதியில் உடல் ஒட்டிக்கொண்டதா என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், சுதாகரனின் உறவினர்கள் பாண்டூர் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் டி.எஸ்.பி கங்காதரன் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலை மறியல்

சுதாகர் வேலை செய்து வந்த காக்களூர் தனியார் கம்பெனி  ஊழியர்களிடமும் போலீஸார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அந்தக் கம்பெனியில் சுதாகருக்கு முன்விரோதம் அல்லது காதல் விவகாரம் ஏதாவது இருக்கிறதா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.