தமிழகத்தில் மேலும் 4 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம்! - ஏல அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு | Central Govt announce for Hydrocarbon auction in Tamilnadu also 14 places of India

வெளியிடப்பட்ட நேரம்: 20:12 (10/01/2019)

கடைசி தொடர்பு:20:12 (10/01/2019)

தமிழகத்தில் மேலும் 4 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம்! - ஏல அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு

ஹைட்ரோகார்பன்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 4 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக மிகப்பெரிய போராட்டங்கள் நடந்து முடிந்திருக்கும் நிலையில், தற்போது மீண்டும் தமிழக காவிரிப் பாசன மாவட்டங்களில் ஒன்றான நாகப்பட்டினத்தில் மேலும் ஒரு ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. இந்த புதிய ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கான ஏல அறிவிப்பு கடந்த 7-ம் தேதி மத்திய பெட்ரோலிய அமைச்சகம் சார்பில் டெல்லியில் வெளியிடப்பட்டது.

இந்தியாவில் எண்ணெய் வளங்களைக் கண்டறிந்து உற்பத்தி செய்வதற்காக ஹைட்ரோ கார்பன் வளங்களைக் கண்டறிதல் மற்றும் உரிமம் வழங்கும் open acreage licensing என்ற கொள்கையை மத்திய அரசு கடந்த 2017-ம் ஆண்டு அறிமுகம் செய்தது. இத்திட்டத்தின்கீழ் இரண்டாம் கட்ட ஏல அறிவிப்பு ஜனவரி 7-ம் தேதி டெல்லியில் நடந்தது. இந்தியா முழுவதும் மொத்தம் 14 இடங்களில் 29,333 சதுர கி.மீ. நிலப்பரப்பில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களைச் செயல்படுத்த முடிவு செய்துள்ள மத்திய அரசு, அவற்றுக்கான ஏலம் மற்றும் விண்ணப்ப அறிவிப்பை அன்றைய தினம் வெளியிட்டது.

பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன்

இதுகுறித்து `பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜனிடம் பேசினோம். ``தமிழ்நாட்டில் காவிரி பாசன மாவட்டமான நாகையில் மொத்தம் 471.19 சதுர கி.மீ பரப்பளவில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் திருப்பூண்டி, கரியாபட்டினம், கருப்பபன்புலம், மடப்புரம் உள்ளிட்ட 4 கிராமங்களில் கிணறுகள் அமைத்து ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு ஏல அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று போற்றப்படும் காவிரி பாசனப் பகுதிகளில் மீண்டும், மீண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்துவது விவசாயத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஈடு செய்ய முடியாத அளவுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் ஏற்படுத்தி வரும் பேரழிவு குறித்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கையில் இந்த அறிவிப்பு அந்தக் கவலைகளை அதிகரிக்கச் செய்கிறது. கஜா புயல் டெல்டா மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தி, மக்கள் தங்களின் வாழ்வாதாரங்களை இழந்து நிர்க்கதியாக நிற்கும் நிலையில், அதே டெல்டா மாவட்டத்தில் இத்தகைய அழிவுத் திட்டங்களை அறிவித்திருப்பது கொடுஞ்செயலே.

நிலப்பரப்புக்கு மேல் உள்ள புதுப்பிக்கக்கூடிய ஆற்றல்களை மட்டுமே இனிமேல் பயன்படுத்த வேண்டும் என்றும் ஏற்கெனவே உள்ள திட்டங்களை 2030-ம் ஆண்டுக்குள் மூட வேண்டும் என்று வலியுறுத்துக் கொண்டிருக்கையில் இந்த அறிவிப்பு எந்த விதத்திலும் அறிவுடைய செயலாகாது. இந்த அறிவிப்பை உடனடியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசையும் இதற்குத் தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொள்கிறோம்" என்றார்.