வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (10/01/2019)

கடைசி தொடர்பு:21:40 (10/01/2019)

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்குக் கடத்த முயன்ற 200 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்!

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்த இருந்த 4 லட்ச ரூபாய் மதிப்புள்ள 200 கிலோ கடல் அட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கடல் அட்டைகள் பறிமுதல்

மன்னார் வளைகுடா கடல் பகுதியில், கடல்வாழ் உயிரினமான கடல் அட்டைகள் உள்ளிட்ட அரிய உயிரினங்களைப் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், மருந்துகள் தயாரிப்பதற்காக இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு இந்தக் கடல் அட்டைகளைப் பிடித்து, உயிருடனும் பதப்படுத்தப்பட்டும் கடத்தப்படுவது தொடர்கதையாக நடந்து வருகிறது. 

தூத்துக்குடி பகுதியில் கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தருவைகுளம் மரைன் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆய்வாளர் நவீன், உதவி ஆய்வாளர் ஜானகிராமன் ஆகியோரது தலைமையிலான மரைன் போலீஸார், தாளமுத்துநகர் பகுதியில் உள்ள தஸ்நேவிஸ் நகரில் ஒரு வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு கடல் அட்டைகளைப் பதுக்கி,  பதப்படுத்தப்பட்டு வந்தது தெரியவந்தது. 

கடல் அட்டைகள் பறிமுதல்

இதையடுத்து அந்த வீட்டிலிருந்த பட்டினமருதூரைச் சேர்ந்த செய்யது அன்வர் மற்றும் லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த முகம்மது இதாரி, ஆகிய இருவரையும் போலீஸார்  கைது செய்தனர். அத்துடன் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 200 கிலோ கடல் அட்டைகள், அவற்றை  பதப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட 3 சிலிண்டர்கள், கேஸ் ஸ்டவ் ஆகியவைகளைப் பறிமுதல் செய்தனர். மேலும், கடத்தல்காரர்கள் பயன்படுத்திய இரு பைக்குகளையும் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் விசாரணை செய்ததில், ராமேஸ்வரம் வழியாக கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து கடல் வழியாக இலங்கைக்குக் கடல் அட்டைகள் கடத்தப்பட இருந்தது தெரியவந்தது. பிடிபட்ட 200 கிலோ கடல் அட்டைகளின் மதிப்பு 4 லட்ச ரூபாய் என போலீஸார் தெரிவித்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க