இலங்கை சிறையிலிருந்து புதுக்கோட்டை மீனவர்கள் 8 பேர் விடுவிப்பு! | Pudukottai district fishermen released from SriLankan prison

வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (10/01/2019)

கடைசி தொடர்பு:23:30 (10/01/2019)

இலங்கை சிறையிலிருந்து புதுக்கோட்டை மீனவர்கள் 8 பேர் விடுவிப்பு!

கடந்த வாரம் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 8 பேரை இலங்கை நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது.

இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ஜெகதாபட்டினம் மீனவர்கள்


புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் சதீஷ், அஜீத், தர்மராஜ், ராமு ஆகியோர் மீன்பிடிக்கச் சென்றபோது படகு பழுதான நிலையில் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடித்துச் செல்லப்பட்டனர். இதேபோல் கோட்டைபட்டினம் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற ரனீசன், ராஜா, விஜி, மணிகண்டன் ஆகிய 4 மீனவர்களையும் 7-ம் தேதி மாலையில் இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். இலங்கைக் கடற்படையினரின் விசாரணைக்குப் பின் ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், இன்று ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தமிழக மீனவர்கள் 8 பேரையும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலங்கை அரசின் பரிந்துரையின் பேரில் ஊர்க்காவல் துறை நீதிமன்றம் விடுதலை செய்தது. மேலும், இவர்கள் சென்ற படகுகள் தொடர்பான வழக்கை இம்மாதம் 28-ம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதி சூட்சன், அன்றைய தினம் அந்தப் படகுகளின் உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகவும் உத்தரவிட்டார். இதையடுத்து இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட கோட்டைபட்டினம் மற்றும் ஜெகதாபட்டினம் மீனவர்கள் ஒரு சில தினங்களில் சொந்த ஊர் திரும்புவார்கள் எனத் தெரிகிறது.