வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (11/01/2019)

கடைசி தொடர்பு:00:00 (11/01/2019)

`தமிழகத்தில் முதல்முறையாக பன்னாட்டு ஜவுளிக் கண்காட்சி!’ - இணை இயக்குநர் தகவல்

ஜவுளி கண்காட்சி பற்றிய மீட்டிங்

`தமிழகத்தில் முதல்முறையாக நடைபெறவுள்ள பன்னாட்டு ஜவுளிக் கண்காட்சியில் கரூர் மாவட்ட ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்கள் பங்கேற்கலாம்’ என்று தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல்துறை அழைப்பு விடுத்துள்ளது.

கரூரில் உற்பத்தியாகும் வீட்டுஉபயோக ஜவுளி

வரும் 27.1.2019, 28.01.2019 மற்றும் 29.01.2019 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் முதல் முறையாக கோயம்புத்தூரில் உள்ள கொடிசியா வளாகத்தில் பன்னாட்டு ஜவுளிக்கண்காட்சி - 2019 நடைபெறவுள்ளது. இக்கண்காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க இருக்கிறார். உலகத்தின் பல்வேறு நாடுகளிலிருந்து ஜவுளிப் பொருள்களை வாங்க பல்வேறு வியாபாரிகள் வருகைதர உள்ளதாகச் சொல்லப்படுகிறது. அதோடு, பல்வேறு நாடுகளிலிருந்து ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்களும் பங்கேற்க உள்ளார்களாம்.

இந்தக்கண்காட்சியில் தமிழகத்தின் ஜவுளி உற்பத்தி மற்றும் கலைத்திறனை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு நிறுவனங்கள் தங்களின் படைப்புகளை சந்தைப்படுத்தவுள்ளன. எனவே, கரூர் மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களை அதிகளவில் இந்தக் கண்காட்சியில் பங்ககேற்கச் செய்யும் வகையிலான முன்னோட்ட ஆயத்தக்கூட்டம் கரூரில் உள்ள தனியார் நிறுவன கூட்ட அரங்கில் இன்று (10.01.2018) நடைபெற்றது.

கரூரில் உற்பத்தியாகும் வீட்டுஉபயோக ஜவுளி.

இக்கூட்டத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை இணை இயக்குநர் நாகராஜ் பேசுகையில்,``ஜவுளி மற்றும் வீட்டு உபயோகத்துக்குப் பயன்படும் ஸ்கிரீன், மேஜை விரிப்புகள், போர்வைகள் உள்ளிட்ட ரகங்கள் தயாரிப்பில் தமிழக அளவில் பெயர் பெற்றது கரூர் மாவட்டமாகும். எனவே, கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து துணி ஏற்றுமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் தமிழகத்தில் முதன்முறையாக நடத்தப்படவுள்ள பன்னாட்டு ஜவுளிக் கண்காட்சியில் கலந்துகொண்டு உலகளாவிய அளவில் கரூர் மாவட்ட ஜவுளி உற்பத்தி குறித்து முத்திரை பதிக்கும் அளவில் தங்களது உற்பத்திப்பொருள்களை காட்சிப்படுத்த வேண்டும்.

கரூரில் உற்பத்தியாகும் வீட்டுஉபயோக ஜவுளி..

இதற்காக சுமார் 9,000 சதுர மீட்டர் பரப்பளவில் பல்வேறு அரங்குகள் அமைக்கப்படவுள்ளன. இதில் ஒரு சதுர மீட்டருக்கான கட்டணமாக ரூ.4,000 (ஜி.எஸ்.டி நீங்கலாக) வசூலிக்கப்படும். இதுகுறித்த மேலும் விபரங்களுக்கு தமிழக கைத்தறித்துறை கூடுதல் இயக்குநரை, 2 வது தளம், குறளகம், சென்னை - 08 என்ற முகவரியிலோ அல்லது texpo.tn.dht@tn.gov.in  என்ற இணையதள முகவரி வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம்’’ என்றார்.