`மக்கள் விரும்பாத எதையும் இந்த அரசு செய்யாது’ - பொள்ளாச்சி ஜெயராமன் | Pollachi Jeyaraman flags off new buses in Coimbatore

வெளியிடப்பட்ட நேரம்: 22:01 (10/01/2019)

கடைசி தொடர்பு:22:01 (10/01/2019)

`மக்கள் விரும்பாத எதையும் இந்த அரசு செய்யாது’ - பொள்ளாச்சி ஜெயராமன்

மக்கள் விரும்பாத எதையும் இந்த அரசு செய்யாது என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி ஜெயராமன்

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில், கோவை கோட்டத்துக்கு வழங்கப்பட்ட 140 பேருந்துகளை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் இன்று மாலை தொடங்கி வைத்தார். இதன் பிறகு, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், ``தமிழகத்தில் ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. பொங்கல் பரிசு வசதி வாய்ப்பு இருப்பவர்களுக்குத் தேவையில்லை. ஆனால், வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களுக்குப் பொங்கல் பரிசு அவசியம். குறிப்பாகத் தாய்மார்களுக்கு பொங்கல் பரிசு அவசியம். சந்தர்ப்பம் வரும்போது தாய்மார்கள் அதற்கான கைம்மாறு செய்வார்கள்.

ஸ்டெர்லைட் ஆலை நிச்சயம் இயங்காது. மக்கள் விரும்பாத எதையும் இந்த அரசு செய்யாது. கிராம சபைக் கூட்டம் என்ற பெயரில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் கட்சிக் கூட்டத்தை நடத்துகிறார். முதல்வராக வேண்டும் என்ற ஆசையில் அவர் இது போன்று செயல்படுகிறார். எதிர்க்கட்சி வரிசையில் எப்போதும் அவர் தொடர்வார். தி.மு.க ஆட்சிக்கு வந்தால், ஜெயலலிதா இறப்புக்குக் காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்று ஸ்டாலின் சொல்லியிருப்பது, அத்தைக்கு மீசை முளைக்கட்டும் பார்க்கலாம் என்பது போல் இருக்கிறது.

கள்ளக்குறிச்சியைத் தனி மாவட்டமாக அறிவித்ததைப்போல, கோவை, திருப்பூர் பகுதிகளை உள்ளடக்கி பொள்ளாச்சியைத் தனி மாவட்டமாக அமைத்துத் தர வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருக்கிறது. பொள்ளாச்சி மாவட்டம் என்ற அறிவிப்பை உரிய நேரத்தில் தமிழக முதலவர் வெளியிடுவார்” என்றார்