வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (11/01/2019)

கடைசி தொடர்பு:07:29 (11/01/2019)

`கைகோத்த ரஜினி-அஜித் ரசிகர்கள்!’ - சோளிங்கரில் பொங்கல் வைத்துக் கொண்டாட்டம்

சோளிங்கரில், ரஜினி-அஜித் புகைப்படங்களை கட்-அவுட்களில் ஒன்றாக இணைத்து வைத்த இருதரப்பு ரசிகர்களும் பொங்கல் வைத்துக் கொண்டாடினர்.

ரஜினி - அஜித்

ரஜினி நடிப்பில் ‘பேட்ட’ மற்றும் அஜித் நடிப்பில் ‘விஸ்வாசம்’ திரைப்படங்கள் நேற்று வெளியானது. திரையரங்குகள் முன்பு ரஜினி மற்றும் அஜித் கட்-அவுட்களை வைத்து, பட்டாசு வெடித்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நேற்று அதிகாலை 3 மணிக்குச் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன. வேலூர் மாவட்டம் முழுவதும் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ‘பேட்ட’ படம் ரிலீஸாவதற்கான முன்னேற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன. சோளிங்கரில் உள்ள சுமதி திரையரங்கில், ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர் என்.ரவி தலைமையில் குவிந்த மன்றத்தினரும், ரசிகர்களும் மேளதாளத்துடன் ஆட்டமாடி குதூகலப்படுத்தினர்.

பொங்கல்

இங்கு, ரஜினி மக்கள் மன்றத்தினரும், அஜித் ரசிகர்களும் ஒன்றுகூடி திரையரங்குகள் முன்பு பொங்கல் வைத்துக் கொண்டாடினர். இரு உச்ச நட்சத்திரங்களின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆனதால், பிரச்னைகளைத் தவிர்க்க இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் சோளிங்கரில் கைகோத்தனர். ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர் ரவி தலைமையில் திரண்ட ரஜினி மற்றும் அஜித் ரசிகர்கள், மாறி மாறி வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர். புதுபடங்களுடன் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் வகையில், ரஜினி மன்ற மகளிரணி நிர்வாகிகள் சர்க்கரைப் பொங்கல் வைத்து, படம் பார்க்க வந்த ரசிகர்களுக்குக் கொடுத்து உற்சாகப்படுத்தினர்.

சோளிங்கர்

நூற்றுக்கும் மேற்பட்ட பூசணிக்காய், தேங்காய், எலுமிச்சை பழங்களால் ‘ரஜினிக்கும், பேட்ட திரைப்படத்துக்கும்’ திருஷ்டி கழித்தனர். இதில், ரஜினி மக்கள் மன்ற மாவட்ட துணைச் செயலாளர் முகமது கலீஃபா, விவசாய அணி செயலாளர் அருணகிரி, இளைஞரணி நிர்வாகிகள் சிவா, ராகவா கிருஷ்ணா, மகளிரணி நிர்வாகிகள் பிரியா அருள், ஷகிலா ஜெயக்குமார், சோளிங்கர் ஒன்றியச் செயலாளர் சுப்பிரமணியன், நிர்வாகிகள் பெருமாள், கொடைக்கல் அன்பழகன், ஜம்புக்குளம் மணி உட்பட மன்றத்தினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர். சோளிங்கரில் அமைதியான முறையில், உற்சாகம் குறையாமல் அஜித் ரசிகர்களையும் அரவணைத்து ரஜினி மக்கள் மன்றத்தினர் ‘பேட்ட’ படத்துடன் விஸ்வாசம் படத்தையும் கொண்டாடியதைப் பொதுமக்கள் வியந்து பாராட்டினர்.