வெளியிடப்பட்ட நேரம்: 09:01 (11/01/2019)

கடைசி தொடர்பு:09:01 (11/01/2019)

``இது புது பொங்கலா.. 28 -வது பொங்கலானு தெரியல..?” - போராட்டத்துக்குத் தயாராகும் அற்புதம்மாள்

`ஏழு பேரின் விடுதலைக்கு ஆளுநர் முடிவெடுக்கலாம்' என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு 100 நாள்களுக்கு மேல் ஆகிறது. ஆளுநர் இன்னும் முடிவெடுக்காமல் உள்ள நிலையில் பேரறிவாளனின் தயார் அற்புதம்மாள், பேரறிவாளன் வரும் பொங்கலுக்கு விடுதலை ஆகி வருவான் என்ற நம்பிக்கையில் உள்ளார்.

அற்புதம்மாள்

`முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரின் விடுதலைகுறித்து தமிழக ஆளுநர் முடிவெடுக்கலாம்' என்று உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்ததையடுத்து, கடந்த 2018 செப்டம்பர் 9-ம் தேதி அன்று தமிழக அமைச்சரவைக் கூடி, 7 பேரை விடுதலை செய்யலாம் எனத் தீர்மானம் நிறைவேற்றி அதை ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பியது. ஆனால், ஆளுநர் இதுவரை இந்த விவகாரத்தில் முடிவெடுக்காமல் உள்ளார். 

பரோலில் வெளி வந்த பேரறிவாளன்

பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், தன் மகன் விடுதலைக்காகக் கடந்த 28 வருடங்களாகப் போராடி வருகிறார். முதல்வர் முதல் ஆளுநர் வரை அனைவரையும் அவர் சந்தித்து விடுதலை தொடர்பாக கோரிக்கை வைத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக கடந்த வருடம் ட்விட்டரிலும் இணைந்து மகனின் விடுதலைக்காகக் குரல் கொடுத்து வருகிறார். 

சகோதரிகளுடன் பேரறிவாளன்

இந்த நிலையில், இன்று அவர், தனது மகன் வரும் பொங்கலுக்கு விடுதலை பெற்று வருவான் என்ற நம்பிக்கையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டரில்,  ``என் பொண்ணுங்க அறிவு பொங்கலுக்கு வருவான்னு காத்திருக்காங்க. தமிழகமெங்கும் அழைச்சு கேக்றாங்க.  நம்பிக்கையா இருக்கேன். இது புது பொங்கலா?  28-வது பொங்கலானு தெரியல? பொங்கலுக்கு வீட்டுக்கு வருவானா. பொங்கல் கழிச்சு நான் ரோட்டுக்கு வரனுமான்னு வர்ற நாள்கள் முடிவு செய்யும்” எனத் பதிவிட்டுள்ளார். 

ட்வீட்