`வேடிக்கைதான் பார்த்தேன்; தண்டிப்பது நியாயமா?!'- நீதிபதியிடம் பாலகிருஷ்ணா ரெட்டி கதறல் | Judges questioned in balakrishna Reddy's case

வெளியிடப்பட்ட நேரம்: 12:51 (11/01/2019)

கடைசி தொடர்பு:13:30 (11/01/2019)

`வேடிக்கைதான் பார்த்தேன்; தண்டிப்பது நியாயமா?!'- நீதிபதியிடம் பாலகிருஷ்ணா ரெட்டி கதறல்

தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் பாலகிருஷ்ணா ரெட்டி. 1998-ம் ஆண்டு ஓசூர் அருகே பாகலூரில் கள்ளச்சாராய விற்பனையை எதிர்த்து நடந்த போராட்டத்தில் அரசுப் பேருந்துகள் மற்றும் காவல்துறையினரின் வாகனங்கள் மீது தீ வைத்துக் கொளுத்தப்பட்டதாக பாலகிருஷ்ணா ரெட்டி மீது காவல்துறை சார்பில் வழக்கு பதியப்பட்டிருந்தது. இதே வழக்கில் 108 பேர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீண்ட நாள்களாக நடந்தது வந்தது. 

பாலகிருஷ்ண ரெட்டி

சமீபத்தில் எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் வழக்கை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து வழக்கின் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், சமீபத்தில் இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், குற்றம் சாட்டப்பட்ட 108 பேரில் 16 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். அதில் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டியும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து, அவரின் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ. பதவி பறிபோனது. 

இதற்கிடையில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பாலகிருஷ்ணா ரெட்டி மேல் முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. முதலில் பேசிய அரசு தரப்பு வழக்கறிஞர், ``பாலகிருஷ்ணா ரெட்டி மீது எந்த எஃப்.ஐ.ஆரும் பதிவு செய்யப்படவில்லை. மேலும் கூட்டமாக தாக்கியதாகத்தான் வழக்கு உள்ளது. ஆனால், சிறப்பு நீதிமன்றம் ரெட்டி மீது மட்டும் குறை கூறித் தீர்ப்பு வழங்கியுள்ளது'' என்றார். 

உயர்நீதிமன்றம்

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ரெட்டி வழக்கில் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தவறு எனக் கூற வருகிறீர்களா. நீங்கள் அரசு தரப்பு வழக்கறிஞர். அதனால் காவல் துறையினரின் வாதங்களை மட்டுமே முன்வைக்க வேண்டும். மாறாக, பாலகிருஷ்ணா ரெட்டி அமைச்சராக இருந்ததால் அவருக்குத் துணை போவதுபோல் நீங்கள் பேசுகிறீர்கள் எனக் கூறினர். மேலும், காவல்துறையினரின் விளக்கத்தை எழுத்துபூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

இதைத்தொடர்ந்து வாதாடிய ரெட்டி தரப்பு வழக்கறிஞர், ``தன் மீது குற்றம் உள்ளதாகத் தீர்ப்பு வழங்கப்பட்ட உடனேயே தன் பதவியை பாலகிருஷ்ணா ரெட்டி ராஜினாமா செய்துவிட்டார். 20 வருட வழக்கினால் தற்போது அவர் பாதிக்கப்பட்டுள்ளார். வாகனத்தை தாக்கி எரித்ததாக ரெட்டி மீது நேரடி குற்றச்சாட்டு இல்லை. எரிப்பு,  தாக்குதல் என எதிலும் ஈடுபடாமல் வேடிக்கை பார்த்தவரை தண்டிப்பது எவ்விதத்தில் நியாயம். தீர்ப்புக்குத் தடை விதிக்க பரிசீலிக்க வேண்டும்'' என்றார். இதற்குப் பதில் அளித்த நீதிபதிகள், விசாரணை தாமதத்துக்கு பல காரணங்கள் இருக்கலாம். அதைக் குறை கூற முடியாது. உங்களுக்கு அரசு தொடர்பான அனைத்து நடைமுறைகளும் தெரியும். அதனால் மற்ற வழக்குகளுக்கு நீங்கள் முன் உதாரணமாகச் செயல்படவேண்டும் எனக் கூறி இந்த வழக்கின் தீர்ப்பை இன்று பிற்பகலுக்கு ஒத்திவைத்தனர்.