மதுரை கலெக்டரிடம் மனு அளிக்க வந்தபோது முகிலன் திடீர் கைது! | Activists Mukilan arrested at Madurai

வெளியிடப்பட்ட நேரம்: 14:42 (11/01/2019)

கடைசி தொடர்பு:14:42 (11/01/2019)

மதுரை கலெக்டரிடம் மனு அளிக்க வந்தபோது முகிலன் திடீர் கைது!

ஜல்லிக்கட்டுப் போராட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டுமென்று மதுரை கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த முகிலன் உட்பட ஏழு பேரை காவல்துறை கைது செய்துள்ளனர்.

முகிலன்

கைதாவதற்கு முன் நம்மிடம் பேசிய ஜல்லிக்கட்டுப் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் முகிலன், ``கடந்த 2017-ம் ஆண்டு தமிழகமெங்கும் தடையின்றி ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் தமிழகமெங்கும் மக்கள் போராடினார்கள். மதுரையிலும் அலங்காநல்லூர், செல்லூர், தமுக்கம், பெருங்குடியிலும் தீவிரமாகப் போராடினார்கள். 

ஜனவரி 23-ம் தேதியன்று சிறப்புச்சட்டம் இயற்றும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் எனக்  போராடிய மக்களை அலங்காநல்லூர், செல்லூர், தமுக்கம் உள்ளிட்ட பல இடங்களில் காவல்துறை தாக்குதல் நடத்தி கைது செய்தது. அன்று மாலை ஜல்லிக்கட்டு சிறப்புச்சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றியது. அப்போது முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், `ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்வோம்' எனக் கூறினார்.

ஆனால், போராட்டம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சி.பி.சி.ஐ.டி-க்கு அரசு மாற்றியது. ஐயாயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்குச் சம்மன் அனுப்பி விசாரித்த மதுரை சி.பி.சி.ஐ.டி,  அலங்காநல்லூரில் 64 பேர், செல்லூர் முதல் வழக்கு 30 பேர், செல்லூர் 2வது வழக்கு 23 பேர், பெருங்குடி எனப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டு நீதிமன்றங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

கைதான முகிலன்

ஜல்லிக்கட்டைக் காக்க போராடி சிறப்புச்சட்டம் இயற்றவைத்தவர்கள் இன்று வழக்குகளுக்காக நீதிமன்றங்களுக்கு அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். ஜல்லிக்கட்டு உரிமைக்காக உறுதியுடன் போராடியவர்களுக்கு அரசு சிறப்பு செய்திருக்க வேண்டும். ஆனால், அவர்களை வழக்கு போட்டு நீதிமன்றத்துக்கு அலைய வைப்பது அறமானது அல்ல. போராட்ட வழக்குகள் அனைத்தையும்  ரத்து செய்ய வேண்டும் என கலெக்டரின் மனு அளிக்க உள்ளோம் " என்று கூறினார்.

மனு அளிக்க மதுரை கலெக்டர் அலுவலகம் வந்தபோது, முகிலன் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டு தல்லாகுளம் காவல் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர். கைதுக்கான காரணம் சொல்லப்படவில்லை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க