வெளியிடப்பட்ட நேரம்: 18:05 (11/01/2019)

கடைசி தொடர்பு:18:05 (11/01/2019)

அறநிலையத்துறை ஆணையராக 10 நாள்களுக்குப் பின்னர், பொறுப்பேற்றுக்கொண்ட பணீந்திர ரெட்டி!

இந்து சமய அறநிலையத்துறையின் புதிய ஆணையராகப் பணீந்திர ரெட்டி இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் 30,000-க்கும் அதிகமான கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்களின் அனைத்து நிர்வாகப் பொறுப்புகளும் அறநிலையத்துறை ஆணையரின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்நிலையில், கடந்த சில வருடங்களாகவே அறநிலையத்துறைக்கு ஆணையர்களை நியமிப்பதில் முக்கியத்துவம் கொடுக்காமல் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை மாற்றி மாற்றி நியமித்து வருகிறது தமிழக அரசு.

பணீந்திர ரெட்டி

தற்போது அண்ணா மேலாண்மை பயிற்சி நிறுவனத்தின் இயக்குநராக உள்ள பணீந்திர ரெட்டியைக் கூடுதல் பொறுப்பாக அறநிலையத்துறையின் ஆணையராகக் கடந்த டிசம்பர் 29-ம் தேதி நியமித்து உத்தரவிட்டது தமிழக அரசு. அறநிலையத்துறையின் ஆணையராக இருந்த ராமச்சந்திரன், கடந்த ஆகஸ்ட் மாதம் ஆணையராக நியமிக்கப்பட்ட சில நாள்களிலேயே தூத்துக்குடி துறைமுகத்தின் சேர்மனாகக் கூடுதலாக நியமிக்கப்பட்டார். 

இந்நிலையில், கடந்த 10 நாள்களுக்கு முன்னதாக ராமச்சந்திரன், அறநிலையத்துறையின் ஆணையர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு தூத்துக்குடி துறைமுகத்தின் தலைவராக செயல்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால், ராமச்சந்திரன் 10 நாள்களுக்கும் மேலாக அறநிலையத்துறையின் ஆணையர் பொறுப்பிலிருந்து விலகாமல் தொடர்ந்து பணியில் இருந்து வந்தார். இதனால், பணீந்திர ரெட்டி பொறுப்பேற்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று ராமச்சந்திரன் விலகியதையடுத்து, பணீந்திர ரெட்டி அறநிலையத்துறை முதன்மைச் செயலாளராகவும் ஆணையராகவும் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.