ரயிலிலிருந்து விழுந்தது ஹவாலா பணமா? - வருமானவரி அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை | IT department investigates mystery bag contains above 30 lakhs case, seized near paramakudi railway station

வெளியிடப்பட்ட நேரம்: 17:50 (11/01/2019)

கடைசி தொடர்பு:18:03 (11/01/2019)

ரயிலிலிருந்து விழுந்தது ஹவாலா பணமா? - வருமானவரி அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை

பரமக்குடியில் ஓடும் ரயிலிலிருந்து தவறி விழுந்த ரூபாய் 37.26 லட்சம் பணப் பார்சலை போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரையிலிருந்து மண்டபத்துக்கு இன்று காலை பயணிகள் ரயில் சென்றது. அந்த ரயில் பரமக்குடி பொன்னையாபுரம் ரயில்வே கேட் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது ரயிலிலிருந்து பார்சல் ஒன்று கீழே விழுந்துள்ளது. பரமக்குடி பொன்னையாபுரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சாமுவேல் மோசஸ் என்பவர் அந்தப் பார்சலை எடுத்துள்ளார். அதைக் கண்ட ரயில் பயணியான ராமநாதபுரத்தைச் சேர்ந்த நகை வியாபாரி மகேந்திரன், கீழே விழுந்த பார்சல் தன்னுடையது. அதை எடுத்து அருகில் உள்ள கடையில் கொடுங்கள். வாங்கிக்கொள்கிறேன்' என சைகை மூலம் கூறியுள்ளார். அந்தப் பார்சலை எடுத்து அருகில் இருந்த கந்தசாமி என்பவரது டீ கடையில் கொடுத்துள்ளார். 

ரயில்

பின்பு, அந்த டீக்கடை காரரிடம் சாமுவேல் மோசஸ், `இந்தப் பண்டலைக் கேட்டு யாராவது வந்தால் கொடுத்துவிடுங்கள். நான் வீட்டுக்குச் சென்று குளித்துவிட்டு வருகிறேன்' எனக் கூறி சென்றுள்ளார். அதன் பின்பு, ரயிலில் இறங்கிய ராமநாதபுரம் செட்டியார் தெருவைச் சேர்ந்த மகேந்திரன் (47) அந்த டீக்கடைக்குச் சென்று டீக்கடைக்காரரிடம் தனது பார்சலைத் தரும்படி கேட்டுள்ளார். உடனே அந்த டீக்கடைக்காரர் பார்சலைக் கொடுத்த சாமுவேல் மோசஸ் இடம் செல்போனில் விவரத்தைக் கூறியுள்ளார். உடனே சாமுவேல் மோசஸும் டீக்கடைக்கு வந்துள்ளார். பார்சலில் பணம் உள்ளதாகக் கூறப்பட்ட நிலையில் அதைத் திரும்ப கொடுப்பதில் அவர்களுக்குள் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து பரமக்குடி நகர் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

பரமகுடி காவல் நிலையம்

அதன்படி பரமக்குடி நகர் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் ராமசுப்பிரமணியன் தலைமையில் போலீஸார் அந்த டீக்கடைக்குச் சென்று அந்தப் பண்டலைக் கைப்பற்றி நகர் காவல் நிலையத்துக்குக் கொண்டு வந்தனர். மேலும், ராமநாதபுரத்தைச் சேர்ந்த மகேந்திரன், சாமுவேல் மோசஸ், கந்தசாமி ஆகிய மூவரையும் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த மகேந்திரன் அந்தப் பண்டலில் ரூபாய் 37,26,000 உள்ளது. அந்தப் பணம் பழைய நகைகளை விற்பனை செய்து பெற்று வந்தேன் எனப் போலீஸாரிடம் தெரிவித்தார். இந்நிலையில் போலீஸார், அந்தப் பண்டலைப் பிரிக்காமல் வருமானவரித்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். 
இதையடுத்து வருமான வரி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், இது ஹவாலா பணமா என்ற கோணத்தில் விசாரணை நடந்துவருகிறது.

ஓடும் ரயிலிலிருந்து லட்சக்கணக்கான பணம் இருந்த பார்சல் கீழே விழுந்தது பரமக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.