`பாத்திரம் கொண்டு வருபவர்களுக்கு 5% தள்ளுபடி!’ - பிளாஸ்டிக் ஒழிப்புக்கு கரூர் ஹோட்டல் அதிபரின் முயற்சி | 5 percent discount for those who bring the role! "- Karur Hotel owner attempt to eradicate plastic

வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (11/01/2019)

கடைசி தொடர்பு:18:20 (11/01/2019)

`பாத்திரம் கொண்டு வருபவர்களுக்கு 5% தள்ளுபடி!’ - பிளாஸ்டிக் ஒழிப்புக்கு கரூர் ஹோட்டல் அதிபரின் முயற்சி

அந்த மண்பானை உணவகம்

 `பாத்திரங்கள் கொண்டு வருபவர்களுக்கு,5 சதவிகிதம் தள்ளுபடி’ என்று அறிவித்து, பிளாஸ்டிக் ஒழிப்பு முயற்சியில் அசத்தலாக இறங்கி இருக்கிறார் கரூரைச் சேர்ந்த ஹோட்டல் அதிபர் ஒருவர்.

உப்புக்கறி


 இன்று உலகம் முழுக்க நீக்கமற எங்கும் நிறைந்து ஈஸ்வரமூர்த்திமனிதர்களுக்கும் மண்ணுக்கும் எண்ணற்ற கேடுகளை தந்துகொண்டிருக்கும் பொல்லாத வஸ்து பிளாஸ்டிக். இதை நமது வசதிக்காகப் பயன்படுத்தி, மூலைமுடுக்கெல்லாம் மலைமலையாகக் குவித்து வைத்துவிட்டு, இப்போது அதன் வீரியத்தால் அல்லல்பட்டு வருகிறோம். இந்நிலையில்தான், தமிழக அரசு பிளாஸ்டிக்கின் தீமையை உணர்ந்து, கடந்த 1-ம் தேதியிலிருந்து ஒருமுறை பயன்படுத்தி வீசியெறியும் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதை, இயற்கை ஆர்வலர்கள் பலரும் வரவேற்றிருக்கிறார்கள்.

கரூர் மாவட்டம் மலைக்கோவிலூர் அருகே ஸ்ரீ முருகவிலாஸ் என்ற பெயரில் மண்பானை சமையல் உணவகம் நடத்தி வரும் ஈஸ்வரமூர்த்தி, `சாப்பாடு பார்சல் வாங்க வரும் கஸ்டமர்கள் பாத்திரங்கள் கொண்டு வந்தால்,அவர்களுக்கு 5 சதவிகிதம் தள்ளுபடி’ என்று அதிரடியாக அறிவித்திருக்கிறார். அந்த அறிவிப்பு அடங்கிய அட்டைகளைத் தனது ஹோட்டல் முழுக்க பல இடங்களில் ஒட்டி வைத்திருக்கிறார். கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் 20 கிலோமீட்டரில் இருக்கிறது இந்த உணவகம். 

'வாழ்த்துகள்' சொல்லி, ஈஸ்வரமூர்த்தியிடம் பேசினோம். ``நான் பல தொழில் பார்த்து, நஷ்டப்பட்டுதான் மனைவி உதவியோடு இந்த ஹோட்டலை ஆறு வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்தேன். எல்லா உணவுகளையும் மண்பானையில் சமைப்பது, சுத்தமான எண்ணெயில் சமைப்பது என்பதில் உறுதியா இருந்தோம். அதேபோல், விறகு அடுப்பில்தான் சமைக்கிறோம். இதனால், எங்க ஹோட்டல் பேமஸாச்சு. எங்க ஹோட்டல் மெனுக்களில் உப்புக்கறியும் தண்ணிக் குழம்பும் ஸ்பெஷலானது. இப்படி இங்கே வரும் கஸ்டமர்களுக்கு நல்ல உணவை மட்டும் கொடுப்பது முக்கியமல்ல, அவர்களின் நலனுக்கு எந்தவகையிலும் நாங்கள் எதிரா இருந்துவிடக் கூடாது என்பதிலும் உறுதியா இருக்கோம்.

மண்பானை உணவக உணவுகள்

அதனால்தான், ஆறு மாதத்துக்கு முன்பே பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்த்துட்டோம். இப்போ அரசே அந்த அறிவிப்பை வெளியிட்டது மகிழ்ச்சி. இந்த விழிப்பு உணர்வை எங்க கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் ஏற்படுத்தத்தான், கடந்த 1-ம் தேதியிலிருந்தே, `பாத்திரம் கொண்டு வருபவர்களுக்கு 5% தள்ளுபடி'ங்கிற அறிவிப்பை வெளியிட்டோம். நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சிருக்கு. `பாத்திரத்தைக் கையில் எடுத்து வருவது கௌரவக் குறைச்சல்' என்று நினைத்த பலரும், இப்போது கைகளில் விதவிதமான பாத்திரங்களைக் கொண்டு வர்றாங்க" என்றார் மகிழ்ச்சியாக.