`இந்த ஒரு லட்ச ரூபாய் எப்படி வந்தது?’ - அதிகாரியிடம் கிடுக்கிப்பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறையினர்! | vigilance raid in pallavaram municipality

வெளியிடப்பட்ட நேரம்: 18:50 (11/01/2019)

கடைசி தொடர்பு:18:50 (11/01/2019)

`இந்த ஒரு லட்ச ரூபாய் எப்படி வந்தது?’ - அதிகாரியிடம் கிடுக்கிப்பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறையினர்!

பல்லாவரம் நகராட்சியில் அதிக அளவில் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினருக்குத் தொடர்ந்து புகார் சென்றது. இதைத் தொடர்ந்து நேற்று மாலை 5 மணிக்குத் திடீரென நகராட்சியில் சென்னை பெருநகர லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி தலைமையில் 10 பேர் கொண்ட குழு அதிரடி சோதனை நடத்தி ஒரு லட்ச ரூபாயைக் கைப்பற்றியிருக்கிறார்கள்.

லஞ்ச ஒழிப்புத் துறை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடர் சோதனைகள் மூலம் அதிரடி காட்டி வருகிறார்கள். கடந்த சில மாதங்களில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை, செங்கல்பட்டு மாவட்டச் சிறைச்சாலை, செங்கல்பட்டு சார்பதிவாளர் அலுவலகம், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை, ஸ்ரீபெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலகம் எனப் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி லட்சக் கணக்தில் லஞ்சப் பணத்தைக் கைப்பற்றினார்கள். இதனால் லஞ்சம் வாங்குவதை புரோக்கர்கள் மூலம் அரசு ஊழியர்கள் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று பல்லாவரம் நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் ஜெயந்தி அறையில் சோதனை செய்தபோது ஒரு லட்ச ரூபாய் அறையில் இருந்தது. அதைக் கைப்பற்றிய காவல்துறையினர், ‘இந்தப் பணம் எப்படி வந்தது?’ என ஜெயந்தியிடம் விசாரித்தனர். பணம் எப்படி வந்ததென தனக்குத் தெரியாது என ஜெயந்தி கூறிவிட்டார். இதைத் தொடர்ந்து இரவு 9.30 வரை சோதனையைத் தொடர்ந்தனர். சோதனையை முடித்த பிறகு அவர்கள் யாரையும் கைது செய்யவில்லை. துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சோதனைக்கு வந்தவர்கள் தெரிவித்தனர். “பல்லாவரம் நகராட்சியில் லஞ்சத்தை நேரடியாக வாங்காமல் அருகில் உள்ள ஜெராக்ஸ் கடை, டீக்கடை போன்ற இடங்களில் உள்ள புரோக்கர்கள் மூலமாக லஞ்சம் வாங்குகிறார்கள். பொதுமக்கள் அவர்களின் மூலமாகச் சென்றால் மட்டுமே வேலை நடக்கிறது. இதனால் லஞ்சத் தொகையும் அதிகமாக உள்ளது. இனி மாற்று வழிகளில் சோதனையை மேற்கொள்ள வேண்டும்” எனப் பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க