வெளியிடப்பட்ட நேரம்: 22:05 (11/01/2019)

கடைசி தொடர்பு:22:05 (11/01/2019)

’ஸ்டாலின் அழைத்தாலும் தி.மு.க-வுடன் செல்ல மாட்டோம்’ - சரத்குமார் திட்டவட்டம்!

தி.மு.க-வின் அழைப்புக்காக நாங்கள் காத்திருக்கவில்லை. அப்படியே ஸ்டாலின் எங்களை தி.மு.க கூட்டணிக்கு அழைத்தாலும் செல்லப் போவதில்லை என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.

சரத்குமார்

நெல்லையில் உள்ள தனியார் பள்ளியின் விளையாட்டு விழாவில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’கடந்த நான்கரை ஆண்டுகளாக மத்திய அரசு தமிழகத்துக்கு எதுவுமே செய்யவில்லை. பிரதமர் மோடி, இந்தியாவின் பெருமையை உலக அளவில் உயர்ந்த வேண்டும் என்று உலக நாடுகளுக்கு எல்லாம் பயணம் செய்தாரே தவிர மக்களுக்காக எந்த நன்மையும் செய்யவில்லை. 

தமிழகத்தில் ஜெயலலிதா என்னும் மிகப்பெரிய ஆளுமையை அ.தி.மு.க இழந்தது. அதன் பின்னர் அந்தக் கட்சியானது மாலுமி இல்லாத கப்பல் போல ஆகியதால் அடுத்து என்ன நடக்குமோ என அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள். மாலுமி இல்லாத கப்பலைச் சீர் செய்வது கடினமானது. ஆனால், அதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றுள்ளார். தமிழகம் மிகப் பெரிய பேரிடரைச் சந்தித்த நிலையிலும், அவர் தனது பணிகளைச் சிறப்பாகச் செய்து கொண்டிருக்கிறார். 

நாங்கள் எங்கு தவறு நடந்தாலும் உடனடியாக அதைச் சுட்டிக் காட்டுகிறோம். நல்லது நடக்கும்போது அதைப் பாராட்டவும் தயங்குவதில்லை. மேக்கேதாட்டூ பிரச்னை, ஜி.எஸ்.டி என அனைத்து விவகாரங்களிலும் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு தமிழகத்துக்கு துரோகம் செய்கிறது. இது பற்றி நாடாளுமன்றத் தேர்தலின்போது பிரசாரம் மேற்கொள்வோம். தேர்தல் அறிவிப்பு வந்த பின்னரே நாங்கள் எத்தனை தொகுதியில் போட்டியிடுவது என முடிவு செய்வோம். 

சரத்குமார்

மு.க.ஸ்டாலின் தற்போது கிராம சபைக் கூட்டங்களை நடத்தி வருகிறார். அவர் இதை ஏற்கெனவே செய்திருக்க வேண்டும், அவர் துணை முதல்வராக இருந்த போது மக்களை நேரடியாகச் சென்று சந்தித்து குறைகளைக் கேட்டிருந்தால் மக்கள் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள். ஆனால், தேர்தல் நேரத்தில் மக்களின் கவனத்தை ஈர்க்க இப்படிச் செயல்பட்டு வருவதை மக்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள். 

தி.மு.க கூட்டணிக்காக நாங்கள் காத்துக் கிடக்கவில்லை. எங்களைக் கூட்டணிக்கு வருமாறு ஸ்டாலினே அழைத்தாலும் நாங்கள் செல்லப்போவதும் இல்லை. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. உள்ளாட்சித் தேர்தல்களை விரைவாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளக்குறிச்சியைத் தனிமாவட்டமாக அறிவித்தது போல தென்காசியையும் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.