வயது வரம்பை மதிக்காமல் வாய்ப்பைப் பறிக்கிறதா தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்?! | TNPSC applicants suffer due to wrong age limit criteria

வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (12/01/2019)

கடைசி தொடர்பு:11:31 (12/01/2019)

வயது வரம்பை மதிக்காமல் வாய்ப்பைப் பறிக்கிறதா தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்?!

``குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க வயதுவரம்பு 37 என்று குறிப்பிட்டிருந்தாலும், 36 வயது நிரம்பியவர்களின் விண்ணப்பத்தை ஏற்பதில்லை. இதனால் ஒரு லட்சத்துக்கும் கூடுதலானவர்கள் தேர்வு எழுதும் வாய்ப்பைத் தட்டி பறித்துள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்!"

வயது வரம்பை மதிக்காமல் வாய்ப்பைப் பறிக்கிறதா தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்?!

`தமிழக அரசு விண்ணப்பதாரர்களுக்கு வாய்ப்பு வழங்குகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாய்ப்பைப் பறிக்கிறது' என்ற குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்  குரூப் 1 தேர்வுக்குத் தயாராகி வரும் மாணவர்கள். 

``தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), ஜனவரி 1-ம் தேதி குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு 37 என்று குறிப்பிட்டிருந்தாலும், 36 வயது நிரம்பியவர்களின் விண்ணப்பத்தை ஏற்பதில்லை. இதனால் ஒரு லட்சத்துக்கும் கூடுதலானவர்கள் தேர்வு எழுதும் வாய்ப்பைத் தட்டிப் பறித்துள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்" என்கின்றனர்  குரூப் 1 தேர்வுக்குத் தயாராகி வருபவர்கள். 

மார்ச் மாதம் நடக்கவுள்ள குரூப் 1 தேர்வின் மூலம், 27 உதவி ஆட்சியர், 56 மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர், 11 வணிக வரித்துறையில் உதவி ஆணையர், 13 கூட்டுறவுத் துறை துணை பதிவாளர், 7 மாவட்ட பதிவாளர், 15 ஊரக மேம்பாட்டுத் துறை அதிகாரி, 8 மாவட்ட வேலை வாய்ப்புத் துறை அதிகாரி, மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அதிகாரி 2 பேர் என மொத்தம் 139 பேரைத் தேர்வு செய்ய உள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம். குரூப் 1 தேர்வுக்கு 31.1.2019-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முதல்நிலை தேர்வு 3.3.2019 அன்று நடைபெறவுள்ளது. 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

குரூப் 1 தேர்வு எழுத பட்டியலினத்தவர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு வயது வரம்பாக 1.7.2019 தேதிக்குள் 37 வயதைப் பூர்த்தியாகாதவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் என்று அறிவித்துள்ளது. ஆனால், 37 வயது பூர்த்தியாகாத எங்களால் குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலையில் உள்ளோம் எனப் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்இதுகுறித்து நம்மிடம் பேசிய குரூப் 1 தேர்வு விண்ணப்பதாரர் முருகன், ``கடந்த ஆண்டு குரூப் 1 தேர்வு எழுத 35 வயது  என்று வரம்பு நிர்ணயித்திருந்தது. மத்திய அரசு சிவில் சர்வீஸ் தேர்வுக்கு 37 வயது வரை அனுமதிக்கும் நிலையில், தமிழக அரசு 35 வயது என இருப்பதைச் சுட்டிக்காட்டினோம். உடனே, சட்டசபையில், முதலமைச்சர் சட்டமன்ற பேரவை விதி 110-ன் கீழ், பட்டியலினத்தவர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு வயது உச்ச வரம்பு 35-லிருந்து 37 ஆகவும், இதர பிரிவினருக்கு தற்போதுள்ள வயது உச்சவரம்பு 30-லிருந்து 32 ஆகவும் உயர்த்தப்படுவதாக அறிவித்தார். ஆனால், தற்போது அறிவித்துள்ள குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளம் விண்ணப்பத்தை ஏற்கவில்லை. இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் ஆணையத்திடம் முறையிட்டும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால், குரூப் 1 தேர்வுக்காக நீண்ட காலம் போட்டித் தேர்வுக்கு படித்து வருபவர்களுக்குக் கடைசி நேரத்தில் வாய்ப்பு மறுக்கப்படுவது பரிதாபமாக உள்ளது. இதை உடனே அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு, 37 வயது பூர்த்தியாகாதவர்களுக்கு வாய்ப்பை வழங்க வேண்டும்” என்றார். 

இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் நந்தகுமார் ஐ.ஏ.எஸ். அவர்களிடம் பேசினோம். ``எந்தத் தேர்வுக்கு அறிவிப்பு வெளியிட்டாலும், ஜூலை மாதத்தில் முதல் தேதியில் என்ன வயதை எட்டி இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இது காலங்காலமாகக் கடைப்பிடித்து வரும் வழக்கமாக இருந்து வருகிறது. இது குரூப் 1 தேர்வுக்கு மட்டுமல்ல, அனைத்துத் தேர்வுகளுக்கும் பொருந்தும். ஜனவரி மாதத்தில் வெளியிட்டாலும் சரி, டிசம்பர் மாதத்தில் வெளியிட்டாலும் சரி, ஜூலை மாதம் முதல் தேதியை வயது வரம்பாக எடுத்துக்கொள்வது வழக்கம்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்ஜூன் மாதம் வரை விளம்பரம் செய்யப்படும்போது விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் 6 மாதத்தில் சேர்க்க முடியாத நிலை உள்ளது. அடுத்த ஆறு மாதத்தில் விளம்பரம் செய்யும்போது விண்ணப்பதாரர்களுக்குச் சாதகமான சூழ்நிலை ஏற்படுகிறது. கடந்த ஆண்டு வயது வரம்பு 35-ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தபோது 34 ஆண்டு ஆறு மாதங்களைக் கடந்தவர்கள் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஏதேனும் ஒரு தேதியை குறிப்பிட வேண்டிய அவசியம் என்பதால் ஜூலை 1-ம் தேதி குறிப்பிட வேண்டி இருக்கிறது” என்றார். 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்தில் எந்தெந்த தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியிடுகிறது. அந்தக் கால அட்டவணையின் அடிப்படையில் எந்தத் தேர்வும் நடத்தப்படுவதில்லை. கால அட்டவணை அடிப்படையில் தேர்வையும், குறிப்பிட்ட கால இடைவெளியில் முடிவையும் வெளியிட வேண்டும். ஆனால், 2018-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட கால அட்டவணையின் குரூப் 1 தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்துவிட்டு, 2019-ம் ஆண்டின் தொடக்கத்தில் விளம்பரத்தை வெளியிட்டிருப்பதால் கடைசி நேர வாய்ப்புக்காகக் காத்திருப்பவர்கள் தேர்வு எழுதுவதற்கான வாய்ப்பை இழந்திருக்கிறார்கள். தமிழக அரசின் வயது வரம்பு சலுகை ஏட்டில் இருந்து எந்தப் பலனும் இல்லை. அதைச் செயல்படுத்தும்போதும் தேர்வு எழுதுபவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளையும் களைய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு!


டிரெண்டிங் @ விகடன்