வெளியிடப்பட்ட நேரம்: 02:30 (12/01/2019)

கடைசி தொடர்பு:11:21 (12/01/2019)

`பிளாஸ்டிக் பைகளில் இருப்பதெல்லாம் நல்லது அல்ல’- குழந்தைகளுக்குப் பொங்கல் தாத்தா அட்வைஸ்

கிறிஸ்துமஸ் தாத்தா திடீரென குழந்தைகளை சந்தித்து அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதுபோல், பொங்கல் தாத்தா பள்ளி மாணவர்களை சந்தித்து மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறார். நம்மாழ்வார் போல் வேடம் அணிந்திருக்கும் பொங்கல் தாத்தா, மாணவர்களுக்கு பாரம்பர்ய தின்பண்டங்கள் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், இவர்கள் ஆரோக்கியமாக வளர்வதற்கான அறிவுரைகளையும் வழங்கி வருகிறார்.

பொங்கல் தாத்தா

காவிரி உரிமை மீட்புக்குழு மற்றும் மன்னையின் மைந்தர்கள் அமைப்பைச் சேர்ந்தவர்களின் ஏற்பாட்டில் நம்மாழ்வார் வேடம் அணிந்த பொங்கல் தாத்தா, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள பள்ளிக்கூடங்களுக்குச் சென்று அங்குள்ள மாணவர்களை திடீரென சந்தித்தார்.  ஜெயின் தெரு தொடக்கப்பள்ளி, அர்பன் பேங்க் நடுநிலைப்பள்ளி, மணிமேகலை தொடக்கப்பள்ளி உள்ளிட்டவைகளுக்கு சென்று மாணவர்கள் முன் தோன்றிய பொங்கல் தாத்தா ``முறுக்கு, அதிரசம், எள்ளுமிட்டாய், கடலை மிட்டாய், பொரி உருண்டை, எள்ளு உருண்டை, இதெல்லாம் தான் உடம்புக்கு நல்லது. இதைதான் நீங்க உங்க அப்பா அம்மாக்கிட்ட கேட்டு வாங்கி சாப்பிடணும். இது நம்ம தமிழ்நாட்டோட பாரம்பர்யமான தின்பண்டம். பளபளப்பான பிளாஸ்டிக் பைல உள்ளதெல்லாம் உடம்புக்கு நல்லதில்ல. ஐஸ்கிரிம், சாக்லேட், கேக்கும் உங்க உடம்புக்கு ஏதாவது கெடுதல் பண்ணும். ரசாயன உரம் போட்ட அரிசி, காய்கறிகளை சாப்பிடமாட்டோம்... இயற்கையில விளைஞ்ச உணவைதான் சாப்பிடுவோம்னு உங்க அப்பா- அம்மாகிட்ட அடம் பண்ணுங்க. உங்களோட பிறந்தநாளைக்கு மரம் வைக்கணும்னு சொல்லுங்க.” என்றார்.

உற்சாகம் அடைந்த மாணவர்கள் ‘ஒருமித்த குரலில் ``சொல்றோம் தாத்தா” என சத்தம் எழுப்பினார்கள். இதற்கு ஏற்பாடு செய்த காவிரி உரிமை மீட்புக்குழுவைச் சேர்ந்த மருத்துவர் பாரதிச்செல்வன் ``இனி ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின்போது பள்ளி மாணவர்களை பொங்கல் தாத்தா சந்தித்து அவர்களை மகிழ்ச்சி அடைய வைப்பார். தமிழர்களின் பாரம்பர்யமான வாழ்க்கை முறை மிகவும் ஆரோக்கியமானது. அவசியமானது. இதை நம்மாழ்வார் தனது வாழ்நாள் முழுவதும் வலியுறுத்திக்கொண்டே இருந்தார். இவர் தமிழர்களின் தாத்தா. அதனால்தான் அவர் உருவத்துல பொங்கல் தாத்தாவை உருவாக்கினோம். நல்ல விஷயங்களையும், மாற்றங்களையும் குழந்தைகள் மனசுல தான் ஆழமா பதிய வைக்கணும். அதனால்தான் பள்ளிக்கூடங்களுக்குப் பொங்கல் தாத்தாவை அழைத்துக்கொண்டு போனோம். 600 மாணவர்களைச் சந்தித்தார். ஆசிரியர்கள், பெற்றோர்கள் மத்தியிலும் இதுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. நெகிழ்ந்து போயி பாராட்டினாங்க. தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களில் உள்ள பொதுநல அமைப்பினர் பொங்கல் தாத்தாவை உருவாக்கி மாணவர்களிடம் கொண்டு போகணும்.” என்றார். பொங்கல் தாத்தாவுக்கு நமது பொங்கல் நல்வாழ்த்துகள்.