வெளியிடப்பட்ட நேரம்: 09:45 (12/01/2019)

கடைசி தொடர்பு:13:36 (12/01/2019)

``விடுமுறை நாள்களில் செயல்படும் தனியார் பள்ளிகள்!’’ – சி.இ.ஓ எச்சரிக்கை

பொங்கல் திருநாளை முன்னிட்டு தொடர்ச்சியாக நான்கு நாள்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், விடுமுறை நாள்களில் பள்ளிகளை நடத்தினால் அப்பள்ளிக்கு நோட்டீஸ் கொடுக்கப்படும் என தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மாரிமுத்து கூறியுள்ளார்.

பள்ளி குழந்தைகள்

விடுமுறை நாள்களில் பள்ளிகளைத் திறந்துவைத்து மாணவர்களை வதைப்பதாக பெற்றோர்கள் குமுறுவது வழக்கம். பெரும்பாலும் இவை தனியார் பள்ளிகளில் நடப்பது வாடிக்கை. பாடத்திட்டத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க வேண்டும் எனவும் மாணவர்களை தேர்வுக்குத் தயார் படுத்துவதற்காக மாதிரி தேர்வுகள் வைக்க வேண்டும் எனவும் கூறிக்கொள்ளும் பல தனியார் பள்ளிகள், விடுமுறை நாள்களில் பள்ளிகளைத் திறந்துவைத்து வழக்கம்போல தங்களது பள்ளி வாகனங்களில் மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளிக்குச் செல்வது தொடர்கதையாகியுள்ளது. விடுமுறை நாள்களில் பள்ளிகளை நடத்தக்கூடாது எனத் தமிழக அரசு முன்னரே அறிவுறுத்தியுள்ள சூழலில், தேனி மாவட்டத்தில் இயங்கும் தனியார் பள்ளிகளில் பொங்கல் விடுமுறை தினங்களில் வகுப்புகள் நடத்தப்பட இருப்பதாக பெற்றோர்கள் பலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

குழந்தைகள்

இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மாரிமுத்துவிடம் நாம் போனில் பேசியபோது, ``பெரும்பாலும் பொங்கல் தினத்தன்று பள்ளிகள் இயங்குவதற்கு வாய்ப்பு இல்லை. மற்ற விடுமுறை நாள்களில் பள்ளிகள் இயங்குகின்றனவா என கல்வித்துறை அதிகாரிகளைக் கொண்டு ஆய்வு செய்யப்படும். அப்படி இயங்கும்பட்சத்தில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் விடப்படும். பின்னர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். மேலும், கல்வித்துறை அதிகாரிகள் சிலரிடம் பேசியபோது, ``விடுமுறை நாள்களில் தங்களது குழந்தைகளைப் பள்ளிக்கு வரச்சொல்லி அப்பள்ளி கட்டாயப்படுத்தினால் அது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கலாம். அதிகாரிகளைத் தொடர்புகொள்ளும் தொலைபேசி எண்கள், தமிழக பள்ளிக்கல்வித்துறை இணையதளத்தில் உள்ளது. தகவலைப் பெறும் அதிகாரிகள், உடனே சம்பந்தப்பட்ட பள்ளிக்குச் சென்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பார்கள்” என்கிறார்கள்.