வெளியிடப்பட்ட நேரம்: 10:15 (12/01/2019)

கடைசி தொடர்பு:13:41 (12/01/2019)

மது பாட்டில்களால் நிரம்பியுள்ள பெரியகுளம் தீர்த்தத்தொட்டி.. வேதனையில் தேனி மக்கள்!

பெரியகுளம் அருகே உள்ள பிரசித்திபெற்ற தீர்த்தத்தொட்டி தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. தீர்த்தத்தொட்டி எங்கிலும் மதுபாட்டில்களாக காட்சியளிக்கிறது.

தீர்த்தத்தொட்டி

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தீர்த்தத்தொட்டியை அறியாதவர்களே தேனி மாவட்டத்தில் இல்லை எனலாம். ஒரு முறை தீர்த்தத்தொட்டியை தூர்வாரும்போது அதிலிருந்து பஞ்சலோக சிவன் சிலை கிடைத்தது. தற்போது அது பெரியகுளம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ளது. அதைத்தொடர்ந்து தீர்த்தத்தொட்டியில் விநாயகர் சிலை ஒன்றை வைத்து பெரியகுளம் மக்கள் வழிபட்டுவருகிறார்கள்.

பெரியகுளம் தீர்த்தத்தொட்டி

``தனியார் நீச்சல் பயிற்சிக் கூடங்கள் இல்லாத காலத்தில் தீர்த்தத்தொட்டியில் வந்துதான் நாங்கள் நீச்சல் கற்றுக்கொண்டோம். வராகநதியில் வெள்ளம் வந்தால் தீர்த்தத்தொட்டி நிரம்பிவழியும். தண்ணீரால் நிரம்பி வழிந்துகொண்டிருந்த தீர்த்தத்தொட்டி இன்று மது பாட்டில்களால் நிரம்பி வழிகிறது. சமூக விரோதிகள் தீர்த்தத்தொட்டியை மினி பாராக மாற்றிவைத்துள்ளனர். இதனால், பிரபலமான தீர்த்தத்தொட்டிக்கு விடுமுறை நாள்களில் குடும்பத்தோடு வரும் பொதுமக்கள் யாரும் இப்போது வருவதில்லை.

மதுபாட்டில்கள்

நூறு வருடப் பழைமையான தீர்த்தத்தொட்டியை அழிவின் விளிம்பிலிருந்து மீட்க வேண்டிய பொறுப்பு, தென்கரை பேரூராட்சிக்கும், தேனி மாவட்ட நிர்வாகத்துக்குமே உண்டு. விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார் பெரியகுளம் வாசி ஒருவர்.