வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (12/01/2019)

கடைசி தொடர்பு:12:55 (12/01/2019)

`அந்த ஒருநாள் என் வாழ்வைப் புரட்டிப்போட்டுவிட்டது' - ஊடகத்தினரை சந்திக்க விரும்பும் ராபர்ட் பயஸ்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பாக, தமிழக அரசு ஆளுநருக்குப் பரிந்துரைக்கலாம் எனக் கடந்த செப்டம்பர் மாதம் 6-ம் தேதி, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தீர்ப்பு வழங்கினார். இதன் பின்னர் செப்டம்பர் 9-ம் தேதி, தமிழக அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டு, அதில் எழுவர் விடுதலை தொடர்பாக ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அது ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால், அதன் மீது பல நாள்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சுமத்தப்பட்டுள்ளவர்கள்

ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழகம் உட்பட உலக நாடுகளில் உள்ள பல தமிழர்கள் கடிதம் மூலமாக ஆளுநருக்குக் கோரிக்கை விடுத்தனர். மேலும் சைக்கிள் பயணம், அரசியல் கட்சிகள் சார்பாக ஆர்ப்பாட்டம், ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் போன்ற பல சம்பவங்கள் நடந்தன. இருந்தும், ஏழு பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் தரப்பிலிருந்து இதுவரை எந்தப் பதிலும் விளக்கமும் தரவில்லை. இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து பேச வேண்டும் என கூடுதல் காவல்துறை இயக்குநருக்குக் கடிதம் எழுதியுள்ளார் ராபர்ட் பயஸ். 

ராபர்ட் தன் கைப்பட எழுதியுள்ள அந்தக் கடிதத்தில், ``எனது குழந்தை பாதுகாப்புடன் பிறந்து வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் கருவுற்றிருந்த மனைவியுடன் உள்நாட்டுப் போர் நடந்த இலங்கையிலிருந்து 1990-ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தேன். 21.05.1991 அன்று ஸ்ரீபெரும்புதூரில் நடந்த குண்டு வெடிப்பு எனது வாழ்வை அடியோடு புரட்டிப் போட்டுவிட்டது. கடந்த செப்டம்பர் மாதம் 6-ம் தேதி உச்சநீதிமன்ற மூன்று நீதிபதிகள் அமர்வு அரசியல் சாசன உறுப்பு 161 கீழ் மாநில அரசு விடுதலை குறித்து பரிசீலிக்க உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் தமிழக முதல்வர் தலைமையிலான அமைச்சரவை கடந்த செப்டம்பர் 9-ம் தேதி கூடி எனக்கும் ஏனைய அனைவருக்கும் விடுதலைக்கான பரிந்துரை வங்கி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியது. 

ராபர்ட் பயஸ் கடிதம்

ஏற்கெனவே நான்கு மாதங்கள் முடிந்த பின்னரும் இது குறித்து ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை. இது நான்கு மாத துன்பமோ அல்லது நான்கு ஆண்டுகள் துன்பமோ இல்லை. ஏறத்தாழ 28 ஆண்டுகளாக நீதி மறுக்கப்பட்டவர்களின் துன்பம். விடுதலையைத் தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் விவரிக்க முடியாத மன அழுத்தத்தில் சிக்கித் தவிக்கிறேன். சிறையில் இருந்த கால கட்டத்தில் என் தந்தையை இழந்துவிட்டேன். நோய் வாய்ப்பட்டிருக்கும் என் தாயைப் பராமரிக்க இயலாத நிலையில் வாழ்கிறேன். என் மனைவியும் மகனும் தொலை தூரத்தில் அநாதைகளைப் போல் வாழ்கின்றனர். 

ஆகையால்தான் கடந்த 2017-ம் ஆண்டு கருணைக் கொலை வேண்டி தமிழக முதல்வருக்கு விண்ணப்பம் அளித்திருந்தேன். இதுபோல் நம்பிக்கைக்கும் அவ நம்பிக்கைக்கும் இடையில் தொடர்ந்து வாழ்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது முடிவுக்கு வரவேண்டும் என்று விரும்புகிறேன். எனவே, எனது விடுதலைக் குறித்து உலகத்தார்க்குச் சிலவற்றை சொல்ல விரும்புவதால் செய்தி ஊடகங்களைச் சந்தித்து பேச அனுமதி அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு எழுதியுள்ளார்

 

ராபர்ட் பயஸ் கடிதம்