வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (12/01/2019)

கடைசி தொடர்பு:14:40 (12/01/2019)

``ஒவ்வொரு பா.ஜ.க தொண்டரிடமும் 4 கேள்விகள்” - ரஃபேல் ஊழல் விளக்கப் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ்

``இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய ஊழலாக  ரஃபேல் போர் விமான ஊழல் உள்ளது. ரஃபேல் விவகாரத்தில் நான்கு கேள்விகள் உள்ளது இதனால் பி.ஜே.பி அரசோ அல்லது மோடியோ விலக்கத் தயாரா?” என காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கேள்வி எழுப்பியுள்ளனர். 

ரபேல் விளக்க பொதுக்கூட்டம்

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ரஃபேல் போர் விமான ஊழல் குறித்த விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் பிரிவு பொதுச் செயலாளர் அறிவழகன் கலந்துகொண்டு பேசினார். அப்போது,  ``இந்திய வரலாற்றில் நடைபெற்ற ஊழல்களில் தலையாய ஊழலாக ரஃபேல் போர் விமான ஊழல் உள்ளது. இந்த ஊழல் குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றபோது அதற்குப் பதில் கூற பிரதமர் நரேந்திர மோடி பயந்துகொண்டு நாடாளுமன்றத்துக்கு வருவதையே தவிர்த்தார்.

பொதுக்கூட்டம்

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பலமுறை பாராளுமன்றத்தில் பேசிய போதும் இதுவரை ஊழல் குறித்து பா.ஜ.க அரசு எந்தவிதமான பதிலும் கூறாமல் மௌனமாக உள்ளது.

பொதுக்கூட்டம்

எனவே, காங்கிரஸ் கட்சியினர் அந்தந்தப் பகுதியிலுள்ள பா.ஜ.க-வினரை பார்த்து நான்கு கேள்விகள் கேட்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் 126 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில், தற்போது வெறும் 36 விமானங்கள் மட்டும் வாங்கப்பட்டது ஏன்? இப்போர் விமானங்கள் ரூ.526 கோடி வாங்குவதற்காகப் போடப்பட்ட ஒப்பந்தம் தற்போது ரூபாய் 1,570 கோடியாக உயர்த்தப்பட்டது ஏன்?

தொண்டர்கள்

ரஃபேல் போர் விமானம் வாங்குவதற்குப் பொதுத்துறை நிறுவனத்தை விட்டுவிட்டு தனியார் துறை நிறுவனமான அம்பானிக்கு கொடுக்கப்பட்டது ஏன்? ரஃபேல் போர் விமானங்கள் குறித்த கோப்புகள் தற்போது கோவா முதலமைச்சராக உள்ளவரிடம் இருப்பது ஏன் என்பது குறித்து கேள்விகள் கேட்க வேண்டும். இது குறித்து பொதுமக்களிடம் பிரசாரம் செய்ய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் அனைத்து அணி நிர்வாகிகள் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.