வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (12/01/2019)

கடைசி தொடர்பு:15:30 (12/01/2019)

பெட்ரோல் பங்க் ஊழியரை வெட்டிக் கொள்ளையடித்த பயங்கரம்! - இருவர் குண்டர் சட்டத்தில் கைது

பெட்ரோல் பங்க் ஊழியரை வெட்டிக் கொள்ளையடித்த வழக்கில் இருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள பால்வாத்துண்ணான் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவசங்கர் (30). இவர் புதுச்சத்திரம், பரங்கிப்பேட்டை சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த மாதம் 26-ம் தேதி பணியில் இருந்தபோது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் போடுவது போல் வந்த மூன்று பேர் சிவசங்கரை கத்தியால் வெட்டி பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் அமுதா வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் புதுச்சேரி முத்தியால்பேட்டை அர்ச்சுனன் மகன் சுரேஷ்(27). கரிக்கலாம்பாக்கம் அழகப்பன் மகன் தேவா (23) உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். 

 

பெட்ரோல் பங்க்

சுரேஷ் மீது கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் கொலை வழக்கும், விழுப்புரம் டவுன், கிள்ளை, புதுச்சத்திரம், சிதம்பரம் தாலுக்கா ஆகிய காவல் நிலையங்களில் வழிப்பறி வழக்குகளும் உள்ளது. மேலும், செங்கல்பட்டு காவல் நிலையத்தில் கார் கடத்தல் வழக்கு என 9 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தேவா மீது கரிக்கலாம்பாக்கம் காவல் நிலையத்தில் 7, கிள்ளை, புதுச்சத்திரம், சிதம்பரம் தாலுக்கா ஆகிய காவல் நிலையங்களில் 11 வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இவர்களின் தொடர் குற்ற சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வனுக்கு கடலூர் மாவட்ட எஸ். பி. சரணவன் பரிந்துரை செய்தார். இதையடுத்து மாவட்ட கலெக்டரின் உத்தரவிவையேற்று கடலூர் மத்திய சிறையில் உள்ள சுரேஷ், தேவா ஆகியோரைக் குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவு நகலை போலீஸார் வழங்கினார்கள்.