வெளியிடப்பட்ட நேரம்: 15:50 (12/01/2019)

கடைசி தொடர்பு:15:50 (12/01/2019)

பொங்கல் பரிசுத் தொகையை தரமறுத்த மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்! - மதுரை அருகே பரபரப்பு

மதுரை உசிலம்பட்டி அருகே அரசு பொங்கல் பரிசாக வழங்கும் 1,000 ரூபாய்க்காக மனைவியை வெட்டிக்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜாத்தி

பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் தமிழக அரசு சார்பாக பொங்கல் பொருள்கள் மற்றும் 1,000 ரூபாய் பணம் வழங்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில், மதுரை உசிலம்பட்டி அடுத்த எழுமலையைச் சேர்ந்த ராஜாத்தி கணவர் ராமருடன் வசித்து வந்தார். தன் மகன், மகள்களுக்குத் திருமணம் முடித்த நிலையில் ராஜாத்தி கூலி வேலைகளுக்குச் சென்று வருகிறார். மதுப் பழக்கத்துக்கு அடிமையான ராமர், எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். அடிக்கடி சண்டை போடுவதால் வெளி மாநிலங்களுக்கு ராஜாத்தி வேலைக்குச் சென்றுவந்துள்ளார்.

ராமர்

இந்த நிலையில், தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊரான எழுமலைக்கு வந்த ராஜாத்தியிடம் ராமர், செலவுக்கு பணம் கேட்டார். ஆனால், மனைவி பணம் இல்லை எனக் கூறிய நிலையில், `ரேஷன் கடையில் பொங்கல் பணம் வாங்கியிருப்பாய் அந்த பணத்தைக் கொடு' எனக் கேட்டதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

அப்போது எதிர்பாராத நேரத்தில் ராஜாத்தியை ராமர் அரிவாளால் கழுத்தில் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த ராஜாத்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவமறிந்து வந்த எழுமலை போலீஸார் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும், இக்கொலை சம்பவம் குறித்து கணவர் ராமரைக் கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பொங்கல் பரிசுத் தொகையான 1000 ரூபாயை தரமறுத்த மனைவியைக் கணவர் வெட்டிக்கொன்ற சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.