வெளியிடப்பட்ட நேரம்: 16:03 (12/01/2019)

கடைசி தொடர்பு:16:18 (12/01/2019)

`பைக், ஹெல்மெட், முதியவர்கள் மட்டுமே இலக்கு'  - வெள்ளிக்கிழமை திருடன் சிக்கியது எப்படி?

வெள்ளிக்கிழமை திருடன் சிவக்குமார்

சென்னை மயிலாப்பூரில் கபாலீஸ்வரர் கோயிலுக்கு வரும் முதியவர்களிடம் கொள்ளையடித்த வெள்ளிக்கிழமை திருடன் சிவக்குமார், போலீஸாரிடம் சிக்கியுள்ளார். அவரிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

சென்னை மயிலாப்பூர் பகுதியில் வெள்ளிக்கிழமைதோறும் முதியவர்களிடம் நகை, பணம் கொள்ளை போனது. இதுகுறித்த புகாரின் பேரில் துணை கமிஷனர் மயில்வாகனன், உதவி கமிஷனர் உக்கிரபாண்டி ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அகஸ்டின், ஏட்டு பிரபு ஆகியோர் கொண்ட போலீஸ் டீம் விசாரணையில் களமிறங்கியது. கொள்ளை நடந்த இடங்களில் கிடைத்த சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அதோடு புகார் கொடுத்த முதியவர்களிடம் தனித்தனியாக போலீஸார் விசாரித்தனர். அப்போது, பாதிக்கப்பட்ட முதியவர்கள் அனைவரும் ஒரே தகவலைக் கூறினர். அதாவது பைக்கில் ஹெல்மெட் அணிந்து வரும் நடுத்தர வயதுடைய நபர்தான் எங்களிடம் அன்பாகப் பேசினார். அப்போது எங்களிடமிருந்த நகை, பணம், செல்போன்கள் ஆகியவற்றைக் கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றுவிடுவார் என்ற தகவலைத் தெரிவித்தனர். இதனால் முதியவர்கள் கூறிய அடையாளங்கள் அடிப்படையில் பைக்கில் ஹெல்மெட் அணிந்துசென்ற நபரை சென்னையில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் கண்டறிய முயற்சி செய்தனர். அப்போது வடபழனி வரை பைக்கில் அந்த நபர் செல்லும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இதனால் வடபழனி பகுதியில் போலீஸார் தீவிரமாக கண்காணித்தனர். 

 வெள்ளிக்கிழமை திருடன் சிவக்குமார்

இந்த நிலையில் மயிலாப்பூர் பகுதியில் வெள்ளிக்கிழமை தோறும் முதியவர்களிடம் திருட்டுச் சம்பவங்கள் தொடர்ந்து நடந்துள்ளன. இதனால் வெள்ளிக்கிழமை திருடன் யார் என்று இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் 10 நாள்களுக்கு மேலாக விசாரித்தார். அப்போதுதான் வெள்ளிக்கிழமை திருடன் குறித்த ரகசிய தகவல் போலீஸாருக்கு கிடைத்தது. அதன்படி திருடன் சிவக்குமாரை போலீஸார் கைதுசெய்து விசாரித்தனர். விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``சென்னையில் முதியவர்களைக் குறி வைத்து கொள்ளைச் சம்பவங்கள் நடந்தன. குறிப்பாக மயிலாப்பூர் பகுதியில் வெள்ளிக்கிழமை தோறும் முதியவர்களிடம் கொள்ளையடித்தது தெரியவந்தது. இந்தக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது வடபழனியைச் சேர்ந்த சிவக்குமார் என்றும் தெரிந்தது. அவரிடம் விசாரித்தபோது, `மயிலாப்பூருக்கு வெள்ளிக்கிழமை வருவேன். 4 மாட வீதிகளில் வரும் முதியவர்களிடம் பேச்சுக் கொடுப்பேன். அப்போது அவர்களின் குடும்ப சூழ்நிலைகளை அன்பாக கேட்பேன். பொதுவாக முதியவர்கள் எல்லோரும் ஏதாவது ஒருவகையில் குடும்பத்தினரால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். அதைத்தான் முதலில் தெரிந்துகொள்வேன். பிறகு அவர்களுக்கு ஆறுதல் கூறுவேன். இதனால் நான் பேசும் முதியவர் என்னை முழுமையாக நம்பிவிடுவார். அதன்பிறகுதான் அவரிடமிருக்கும் செல்போன், நகை, பணம் ஆகியவற்றை திருடுவேன்.  அங்கிருந்து பைக்கில் தப்பிவிடுவேன். என்னுடைய முகத்தை யாரும் அடையாளம் கண்டுகொள்ளாமலிருக்க ஹெல்மெட்டை கழற்ற மாட்டேன். 

வெள்ளிக்கிழமை திருடன் சிவக்குமார் சிக்கிய சிசிடிவி காட்சி

தினமும் மூன்று மோதிரங்கள் திருடுவதுதான் என்னுடைய டார்கெட். மயிலாப்பூரில் வெள்ளிக்கிழமை என்றால் மற்ற நாள்களில் வடபழனி, கூடுவாஞ்சேரி, பல்லாவரம், தாம்பரம் ஆகிய இடங்களுக்குச் செல்வேன். அங்குள்ள முதியவர்களிடம் என்னுடைய ஸ்டைலில் கொள்ளையடிப்பேன். பிறகு நகைகளை வடபழனி, கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் அடமானக்கடைகளில் அடகு வைத்து பணம் வாங்குவேன். அந்தப்பணத்தை வைத்து ஜாலியாக வாழ்ந்துவந்தேன். 

என்னுடைய சொந்த ஊர் மதுரையில் உள்ள குக்கிராமம். எனக்கு விவசாயத்தில் மீது ஆர்வம் உண்டு. பத்தாம் வகுப்பில் பெயிலாகிவிட்டதால் சின்னச் சின்ன வேலைகளைச் செய்துவந்தேன். இந்தச்சமயத்தில்தான் கொள்ளையடித்த பணத்தைக் கொண்டு மதுரையில் 45 ஏக்கர் இடத்தை லீசுக்கு எடுத்து கரும்பு விவசாயம் செய்துவருகிறேன்' என்று  தெரிவித்தார். 

எங்களிடம் சிக்கிய சிவக்குமாருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனர். இவர் மீது சூளைமேடு காவல் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது. மேலும், தொடர்ந்து சென்னையில் உள்ள காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகளும் உள்ளன. இதனால் குண்டர்சட்டத்தின் கீழ் சிவக்குமார் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து வெளியில் வந்த அவர், முதியவர்களை குறி வைத்து கொள்ளையடித்துவந்துள்ளார். மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் மட்டும் சமீபத்தில் 4 புகார்கள் உள்ளன. அதன்பேரில் சிவக்குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம். அவரிடமிருந்து மூன்று செல்போன்கள், ஒரு லட்சம் ரூபாய் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளோம். சிவக்குமார் கடந்த 18 ஆண்டுகளாக கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்" என்றார். 

  வெள்ளிக்கிழமை திருடன் சிவக்குமார் சிக்கிய சிசிடிவி காட்சி

நுங்கம்பாக்கத்தில் நடந்த வித்தியாசமான சம்பவம் 

நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு முதியவரிடம் சில மாதங்களுக்கு முன் சிவக்குமார் அன்பாகப் பேசியுள்ளார். இதனால் அந்த முதியவர் சிவக்குமாரை நம்பியுள்ளார். தன்னுடைய பைக்கில் முதியவரை ஏற்றிக்கொண்டு செல்போன் கடைக்குச் சென்றுள்ளார். செல்போன் கடையில் முதியவரை தன்னுடைய அப்பா என்று அறிமுகப்படுத்திய சிவக்குமார், அங்கிருந்து 5 செல்போன்களை வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் தலைமறைவாகிவிட்டார். நீண்ட நேரமாகியும் சிவக்குமார் திரும்பி வரவில்லை. அதன்பிறகுதான் முதியவரை சிக்க வைத்து செல்போன் கடைக்காரரை சிவக்குமார் ஏமாற்றியது தெரியவந்தது. சிவக்குமாரால் பாதிக்கப்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை 200ஐ தாண்டும். இதனால் சிவக்குமாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை போலீஸார் முடிவு செய்துள்ளனர். 

சிவக்குமாரின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று போலீஸாரிடம் கேட்டதற்கு பட்டினம்பாக்கத்தைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர் இருக்கிறார். விரைவில் அவர் மீதும் நடவடிக்கை எடுப்போம் என்கின்றனர் போலீஸார். கொள்ளையடித்த பணத்தைக் கொண்டு ஒரு கட்சியில் மாநில அளவில் பொறுப்பு வாங்க வேண்டும் என்பதுதான் சிவக்குமாரின் திட்டமாம். ஆனால், அதற்குள் அவர் சிக்கிவிட்டார். 

முதியவர்களை குறி வைத்து வெள்ளிக்கிழமை திருடன் சிவக்குமார் குறித்த தகவல்கள் போலீஸாரை மட்டுமல்லாமல் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.