ஆதரவற்ற குழந்தைகளோடு பொங்கல் கொண்டாடிய நாகை கலெக்டர்! | Nagapattinam Collector celebrates pongal with children and old age people

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (12/01/2019)

கடைசி தொடர்பு:19:00 (12/01/2019)

ஆதரவற்ற குழந்தைகளோடு பொங்கல் கொண்டாடிய நாகை கலெக்டர்!

pongal

நாகப்பட்டினம் அன்னை சத்யா அரசினர் குழந்தைகள் காப்பகத்திலுள்ள ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்களுடன் மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் பொங்கல் விழா கொண்டாடினார்.

பொங்கல்

நாகை மாவட்டத்தில் 2004-ம் ஆண்டு திடீரென தாக்கிய சுனாமி பேரழிவால், பல குழந்தைகள் தாய் தந்தையர்களை இழந்து ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். அவர்கள் அன்னை சத்யா அரசு காப்பகத்தில் கொண்டுவந்து சேர்த்து வளர்க்கப்படுகின்றனர். அவர்களுக்குத் தேவையான உணவு, உடை, கல்வி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும், மாவட்ட நிர்வாகம் சார்பாக செய்து தரப்படுகிறது. மேலும், அங்கு தங்கிப் பயிலும் மாணவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து தருகிறது. இதன் அருகிலேயே அன்னை சத்யா ஆதரவற்ற முதியோர் இல்லமும் செயல்படுகிறது.

பொங்கல் திருநாளை முன்னிட்டு, இன்று ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்களுடன் சேர்ந்து நடத்திய பொங்கல் விழாவில் மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் கலந்துகொண்டார். அப்போது அனைவருக்கும் புத்தாடை, இனிப்பு, கரும்பு வழங்கியதோடு, அவர்களோடு சேர்ந்து பொங்கல் பொங்கியபோது குழந்தைகள் 'பொங்கலோ பொங்கல்' என்று உற்சாக கோஷமிட்டனர்.

குழந்தைகளிடையே பேசிய கலெக்டர் சுரேஷ்குமார், ``இங்கு தங்கிப் பயிலும் மாணவ மாணவியர்கள் தன்னம்பிக்கையோடும், வைராக்கியத்தோடும், நன்றாகப் படித்து முன்னேற இந்தப் பொங்கல் நன்னாளில் மனதார வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார். அதுபோல் முதியோர்களிடம் பேசியபோது, ``உங்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் எப்போதும் உறுதுணையாக இருக்கும்’' என்று நம்பிக்கையூட்டினார். இவ்விழாவில் நாகை வட்டாட்சியர் இளங்கோவன் மற்றும் காப்பக பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

படம் - பா: பிரசன்னா