வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (12/01/2019)

கடைசி தொடர்பு:20:00 (12/01/2019)

`என் மகனுக்கு என்ன நோய் என்று சொல்லுங்களேன்!’ - தாயின் வேண்டுகோள்

திடீரென மகனின் கால்கள் இரண்டும் நடக்க முடியாமல் செயல் இழந்த போதும், மனம் தளராமல் தள்ளுவண்டியில் பள்ளிக்கு அழைத்து வருகிறார் அந்த தாய். ``ஓடியாடித் திரிந்த மகனுக்கு  என்ன வியாதின்னு  எந்த டாக்டரும் சொல்ல மறுக்கிறார்களே ?" என்றும் வேதனைப்படுகிறார்.

handicap

நாகை மாவட்டம், தரங்கம்பாடி அருகே, நல்லாடை, பாரதியார் வீதியில் வசிக்கும் உமாகாந்தன்-  பவானி தம்பதியின் ஒரே மகன் தினேஷ் குமார். தற்போது நல்லாடை அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் தினேஷ்குமாரை, அவனின் தாயார் பவானி, தினமும் காலையில் மூன்று சக்கர வண்டியில் அமரவைத்து  தள்ளிக்கொண்டு வந்து சுமார் 1.கி.மீ. தூரம் பள்ளி வகுப்பறையில் விடுகிறார். அதே வண்டியிலேயே அமர்ந்து பயிலும் தினேஷ்குமாருக்கு மதியம் ஒரு முறை வந்து உணவூட்டுகிறார். மீண்டும் மாலை பள்ளி முடிந்தவுடன்  வந்து அழைத்துச் செல்கிறார்.

``என்னாச்சு தினேஷ்குமாருக்கு? பவானியிடம் கேட்டோம். ``2003-ல் பிறந்த என் மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கும் வரை மற்றவர்களைப் போலவே நன்றாகத்தான் நடந்தே பள்ளிக்குச் சென்று படித்து வந்தான். ஒருநாள் திடீரென `அம்மா என்னால் நடக்க முடியலன்னு' சொன்னதும், எங்களாலேயே நம்ப முடியலை. அவனைத்  தூக்கி நிறுத்தினாலும் கீழே விழுந்துவிடுகிறான். என் வீட்டுக்காரர் தச்சுத் தொழில் செய்யும் கூலி வேலைக்காரர். எங்க சக்திக்கு மீறி மயிலாடுதுறை, காரைக்கால், பாண்டிச்சேரி, சென்னை என பல ஊர்களுக்கு  மகனை அழைத்துச் சென்று பல மருத்துவமனைகளில் வைத்தியம் பார்த்துட்டோம்.

எல்லாருமே 'கொஞ்சம் லேட்டா ஆனாலும் சரியா போயிடும்னு' சொல்லி மருந்து மாத்திரை தர்றாங்க. ஆனால் `என்ன வியாதி? என்று இதுவரை யாருமே சொல்லலை. அவன் உடல் நிலையும் குணமாகலை. எங்க நிலைமையைப் பயன்படுத்தி  ஒரு நாட்டு வைத்தியன் ' ஒரே மாசத்துல நடக்க வைக்கிறேன்னு  நம்பவைத்து  ரூ.20,000 ஏமாற்றிட்டு போய்ட்டான். எங்க கண் பார்க்க, ஓடியாடி விளையாண்ட புள்ள சக்கர நாற்காலியில முடங்கிக் கிடப்பதைப் பார்த்து அழாத நாளில்லை. வேண்டாத தெய்வம் இல்லை. அவனுக்கு இப்ப இருக்கிற ஒரே நண்பன் செல்போன்தான். எப்பவும் அதனோடுதான் அவனுக்கு விளையாட்டு. படிப்புல ஆர்வம் இருக்கிறதால தொடர்ந்து படிக்க வைக்கிறோம்.

ஆனாலும் மருந்து மாத்திரைகள் சாப்பிடுவதால் ஞாபக சக்தி குறைவா இருக்கு. என்கிட்ட படிச்சி சரியா சொல்றவன், பள்ளிக்கூடம் போனா மறந்துடறான். இத்தனை மருத்துவமனைகளுக்கு சென்றும் 'என் பிள்ளைக்கு என்ன வியாதி? ஏன் இப்படி ஆனான்? மீண்டும் பழைய மாதிரி நடப்பானா? இந்தக் கேள்விகளுக்குப் பதிலே தெரியலை" என்று கண்கலங்கினார். மருத்துவ உலகம் தினேஷ்குமார் மீது கருணை காட்டுமா?

படம் - பா.பிரசன்னா