`தமிழ்நாட்டில் தாமரை மலரும் என்பது மனநோயாளியின் புலம்பல்!' - நாஞ்சில் சம்பத் | Nanjil sampath slams BJP

வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (12/01/2019)

கடைசி தொடர்பு:20:30 (12/01/2019)

`தமிழ்நாட்டில் தாமரை மலரும் என்பது மனநோயாளியின் புலம்பல்!' - நாஞ்சில் சம்பத்

தமிழ்நாட்டில் தாமரை மலரும் எனத் தமிழிசை கூறுவது மனநோயாளியின் புலம்பல் என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

நாஞ்சில் சம்பத்

விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோயில் அருகே உள்ள தனியார் கல்லூரியில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாஞ்சில் சம்பத் பங்கேற்றுப் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, `இந்தி தெரியாது என்ற காரணத்துக்காக ஆபிரகாம் சாமுவேல் என்ற தமிழரை விமான நிலையத்தில் அவமானப்படுத்திய மும்பை விமான நிலைய குடிமை அதிகாரி பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்.

நாஞ்சில் சம்பத்

கொடநாடு கொலை வழக்கில் முதல்வருக்கு தொடர்பு உள்ளது என தெஹல்கா முன்னாள் ஆசிரியர் குற்றம் சாட்டியிருப்பதற்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். உண்மையை வெளியுலகத்துக்குக் கொண்டு வர வேண்டும். அதை நான் வரவேற்கிறேன். பொருளாதாரரீதியான 10 சதவிகித இடஒதுக்கீடு என்பது சமூகநீதிக்கு எதிராக தொடரப்பட்ட யுத்தம். வெறும் 3 சதவிகிதம் மட்டுமே  இருப்பவர்களுக்கு ஏன் 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

நாஞ்சில் சம்பத்

தமிழகத்தில் தாமரை மலரும் எனத் தமிழிசை கூறுவது மனநோயாளியின் புலம்பல் போலவே உள்ளது. வகுப்புவாத சக்திகள் மற்றும் மத்திய அரசுக்கு எதிராக எனது பிரசாரம் இருக்கும். எதிர்கால அரசியல் திட்டம் குறித்த கேள்விக்கு, என்னிடம் பலமிருந்தால் நானே கட்சி ஆரம்பித்திருப்பேன். ஆனால் பலமில்லை என்றார். தினகரனுடனோ, வைகோவுடனோ செல்ல மாட்டேன் எனத் தெரிவித்தார்.