ஜல்லிக்கட்டில் யாருக்கும் முதல் மரியாதை இல்லை! - மதுரை மாவட்ட ஆட்சியர் திட்டவட்டம் | Madurai district collector holds holds meeting over Avaniyapuram Jallikkattu

வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (12/01/2019)

கடைசி தொடர்பு:21:30 (12/01/2019)

ஜல்லிக்கட்டில் யாருக்கும் முதல் மரியாதை இல்லை! - மதுரை மாவட்ட ஆட்சியர் திட்டவட்டம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சடங்கு, சம்பிரதாயம் உள்ளிட்ட எந்த ஒரு தனி நபருக்கும்  முதல் மரியாதை கிடையாது மதுரையில் மாவட்ட ஆட்சியர் திட்டவட்டம்.

ஜல்லிக்கட்டு

மதுரையில் அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டுக்கு அடுத்தபடியாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு புகழ்பெற்றது. தை முதல் நாள் நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெறும் இந்நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக சர்ச்சை நிலவிவந்தது. தென்கால் பாசன விவசாயிகள் என்ற பெயரில் ஜல்லிக்கட்டில் முறைகேடுகள் செய்வதாக புகார்கள் எழுந்தது. இந்நிலையில் இந்தாண்டு பல்வேறு தரப்பினரும் பல்வேறு புகார்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து வந்தனர். அனைத்து சமூகத்தினரையும் சேர்ந்த குழுவை அமைத்து ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும். ஒரே சாதி ஆதிக்கம் இருக்க கூடாது என 14 வழக்குகள் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கு விசாரணையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கான குழுவை நீதிமன்றமே அமைக்கும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

ஜல்லிக்கட்டு

இந்நிலையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் தலைமையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி ராகவன் மற்றும் 16 பேர் கொண்ட குழுவை கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன்

இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் நடராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,``அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவின் போது சடங்கு சம்பிரதாயங்கள் கிடையாது. எந்த ஒரு தனி நபருக்கோ, ஜல்லிக்கட்டு காளைகளுக்கோ முதல்மரியாதை வழங்கபடமாட்டாது. 3 எஸ்.பிக்கள் தலைமையில் 760 காவல்துறையினர் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர், விழாக் குழுவின் சார்பாக அனுமதிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்புக் குழு மற்றும் ஆலோசனைக் குழுவும் மட்டும்தான் விழா நன்கொடைகளை சேர்க்க அனுமதி உள்ளது. மேலும், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்காக ஒருங்கிணைப்புக் குழு சார்பாக தனி வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது என்றார்.

ஜல்லிக்கட்டு ஆலோசனைக் கூட்டம்

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி ராகவன் கூறுகையில், ``மனிதன் மனிதனாக மதிக்கப்பட வேண்டும். உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின்படி அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து ஜல்லிக்கட்டு விழா நடத்தப்படும்’’ என்று தெரிவித்தார்