வெளியிடப்பட்ட நேரம்: 19:54 (12/01/2019)

கடைசி தொடர்பு:19:54 (12/01/2019)

`ஈயைக்கூட அடிக்க மாட்டார் எடப்பாடி பழனிசாமி; அந்த வீடியோ ஒரு நாடகம்’ - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

கொடநாடு கொலைகள் குறித்த ஆவணப்படம் குறித்து பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ``யாரோ வீணாய் போனவர்கள் செய்யும் செயல் இது. ஈயைக் கூட அடிக்க மாட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி’ என்று தெரிவித்தார்.

ராஜேந்திர பாலாஜி

சென்னை நந்தனம் ஆவின் தலைமை அலுவலகத்தில் சிறப்பாகப் பணிபுரிந்த பணியாளர்களுக்கு போனஸ் வழங்கினார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. பின்னர் செய்தியாளர்களிடம்பேசிய அவர், ``பணியில் இருப்போருக்கும் பணியில் இருந்து ஓய்வு பெற்றோருக்கும் உதவி செய்ய அ.தி.மு.க அரசு உள்ளது. ஆவின் பொருட்களின் விற்பனை கூடி உள்ளதற்கு காரணம் பணியாளர்களுடைய கடினமான உழைப்பு மற்றும் கடினமான முயற்சிதான். ஏழை மக்களுக்கான திட்டங்கள் என்ன என்பதை பார்த்துபார்த்து செய்து கொண்டிருக்கிற பாட்டாளியின் தோழர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. முதலமைச்சர்; அமைச்சர்களை சுதந்திரமாகச் செயல்பட விடுகிறார்.  

எடப்பாடி பழனிசாமி

பால்வளத்துறை சிறந்து விளங்குகின்றது. சிங்கப்பூர், ஹாங்காங் போன்ற நாடுகளிலும் ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை நடந்து வருகிறது. வரும் மாதங்களில் கத்தார், துபாய் போன்ற அரபு நாடுகளிலும் ஆவின் பொருட்கள் விற்கப்படும். மேலும் எல்லா மாநில தலைநகரங்களிலும் ஆவின் பொருட்கள் விற்கப்பட்டு வருகிறது  பால் தொடக்க கூட்டுறவு பணியாளர்கள் 28,444 பணியாளர்கள் மொத்தம் ரூபாய் 2.65 கோடி வழங்கப்பட்டது. ஆவின் பொருட்களில் பயன்படுத்தப்பட்ட, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது’’ என்றார்.

கொடைநாடு கொலைகள் குறித்த ஆவணப்படம் குறித்த செய்தியாளர்களிடம் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், ``யாரோ வீணாய் போனவர்கள் செய்யும் செயல் இது. ஈயைக் கூட அடிக்க மாட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. கட்சிக்குக் களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு எதிர்க்கட்சிகள் செய்யும் சதிதான் அந்த ஆவணப்படம். ஜெயலலிதாவுக்கும், முதலமைச்சருக்கும் களங்கம் ஏற்படுத்துவதற்காக செய்யப்பட்ட சதி இது. அந்த வீடியோவில் முதலமைச்சர் கத்தியால் குத்துவது போலவோ அல்லது சுவர் ஏறி குதிப்பது போலவோ இல்லை. விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட வீடியோ அது. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருக்கக் கூடாது என்பதுதான் திமுகவின் எண்ணம். அந்த ஆவணப் படத்தில் உள்ளது எல்லாமே பொய், நாடகம்’’ என்றார்.