‘டெல்டாவில் எரிவாயு கிணறுகள் ; விவசாயிகளை வஞ்சிக்கும் செயல்’ - ஜி.கே வாசன் காட்டம் | GKVasan slams BJP Government

வெளியிடப்பட்ட நேரம்: 05:30 (13/01/2019)

கடைசி தொடர்பு:05:30 (13/01/2019)

‘டெல்டாவில் எரிவாயு கிணறுகள் ; விவசாயிகளை வஞ்சிக்கும் செயல்’ - ஜி.கே வாசன் காட்டம்

திருவாரூரில் 240 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் மீண்டும் எரிவாயு கிணறுகள் அமைப்பதற்கான அறிவிப்பானையை மத்திய அரசு வெளியிட்டிருப்பது விவசாயிகளை வஞ்சிக்கக்கூடிய செயல் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பேசியுள்ளார்.

ஜி.கே.வாசன்

 

திருப்பூரில்  தனியார் பள்ளி ஒன்றில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொள்வதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று திருப்பூர் வந்திருந்தார். நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "கொடநாடு எஸ்டேட் கொலை சம்பந்தமாக பல்வேறு சம்பவங்கள் தற்போது வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில், உண்மை நிலையை அரசு மக்களுக்கு தெரியப்படுத்திட வேண்டும். ஓர் அமைச்சரே ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் தெரிவித்துள்ள நிலையில், அந்த மரணம் பற்றிய விசாரணையை துரிதப்படுத்திட வேண்டும்.

கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கையான அத்திக்கடவு அவிநாசி திட்டத்துக்கு டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திட்டத்துக்கான பணிகளை விரைவாகத் துவங்க வேண்டும். மேகதாது பிரச்னையில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து கர்நாடக அரசுக்கு ஒரு முற்றுப்புள்ளியை வைத்தாக வேண்டும்.

பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டில் சமூக நீதி பாதிக்காதவாறு மத்திய அரசானது மாநில அரசுகளின் கருத்துக்களைக் கேட்டு ஒற்றை நிலைபாட்டுடன் அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும். ஸ்டெர்லைட் விவகாரத்தில் அரசு இரட்டை நிலைப்பாட்டில் இருக்கக் கூடாது. மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கையை மட்டுமே மேற்கொண்டாக வேண்டும். 

டெல்டா மாவட்டமான திருவாரூரில் 240 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் மீண்டும் எரிவாயு கிணறுகள் அமைப்பதற்கான அறிவிப்பானையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது, விவசாயிகளை வஞ்சிக்கும் இந்த திட்டத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவே முடியாது. அதேபோல விவசாய விளைநிலங்கள் வழியாக உயர் அழுத்த மின்கோபுரங்கள் அமைப்பது தொடர்பான பிரச்னையில் பேச்சுவார்த்தை நிலுவையில் இருக்கும்போது, மீண்டும் விவசாய நிலங்களில் மின்கோபுரம் அமைக்கத் தொடங்கியிருப்பதையும் அரசு நிறுத்தி வைக்க வேண்டும். மேலும் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது போராட்டத்துக்கும் அரசு ஒரு சுமூக முடிவைக் காண வேண்டும்”என்றார்.