ராமேஸ்வரம் கோயிலில் நிறுத்தப்பட்ட ஆளுநர் வாகனம் - பக்தர்கள் வேதனை | TN Governor Car Disturbs Rameshwaram Devotees

வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (13/01/2019)

கடைசி தொடர்பு:06:30 (13/01/2019)

ராமேஸ்வரம் கோயிலில் நிறுத்தப்பட்ட ஆளுநர் வாகனம் - பக்தர்கள் வேதனை

 ராமேஸ்வரம் கோயில் பிரதான வாயிலான கிழக்கு கோபுர வாசலினை மறைக்கும் வகையில் ஆளுநரின் கார் நிறுத்தப்பட்டிருந்தது பக்தர்களை வருத்தமடையச் செய்தது.

ஆளுநர்

ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலில் 22 தீர்த்தங்கள் உள்ளன. இந்த தீர்த்தங்களில் நீராடிய பின்னரே பக்தர்கள் கோயிலில் சாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதே போல் கோயிலுக்கு வெளிப்புறங்களிலும் 50-க்கும் அதிகமான தீர்த்தங்கள் உள்ளன. இவற்றில் பல தீர்த்தங்கள் அழிந்து போன நிலையில் இருந்து வந்தன. ராமேஸ்வரத்தில் இயங்கி வரும் 'பசுமை ராமேஸ்வரம்' என்ற அமைப்பு அரசு மற்றும் தனியார் அமைப்புகளுடன் இணைந்து இந்த தீர்த்தங்களை புனரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதுவரை சுமார் 30 தீர்த்தங்கள் இது போன்று புனரமைக்கப்பட்ட தீர்த்தங்களை நாட்டிற்கு அர்ப்பணிக்கும் விழா நேற்று ராமேஸ்வரத்தில் நடந்தது.

மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமையில் நடந்த இந்த விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்று தீர்த்தங்களில் புனித நீர் ஊற்றி நாட்டுக்கு அர்ப்பணித்தார். அமைச்சர் மணிகண்டன், விவேகானந்தா கேந்திர துணைத் தலைவர் பாலகிருஷ்ணா, பசுமை ராமேஸ்வரம் அமைப்பின் நிர்வாகிகள் வாசுதேவ், சரஸ்வதி உள்ளிட்ட ஏராளமானோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

 தமிழக ஆளுநர்


இதனைத் தொடர்ந்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு சென்றார். அங்கு ஆளுநருக்கு கோயில் நிர்வாகத்தினர் மேளதாளத்துடன் வரவேற்பு அளித்தனர். இதையடுத்து சுவாமி - அம்பாள்  சன்னிதிகளில் நடந்த சிறப்பு ஆராதனையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார் ஆளுநர். பின்னர் ராமேஸ்வரம் காஞ்சி மடத்தில் நடந்த ஆயுள் விருத்திக்கான பூஜையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்றார்.

ஆளுநரின் வருகையினை முன்னிட்டு சுமார் அரை மணி நேரம் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. மேலும் ஆளுநர் வந்த காரினை கோயிலின் பிரதான வாயிலான  பக்தர்கள் செல்லும் கிழக்கு வாசலினை மறைக்கும் வகையில் நிறுத்தியிருந்தனர். கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய முடியாத பக்தர்கள் வெளியில் இருந்தபடியே இந்த வாயிலில் நின்று சாமியை தரிசனம் செய்து செல்வது வழக்கம். அதற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆளுநர் வந்த காரினை கடவுளை மறைக்கும் நிலையில்  அதிகாரிகள் நிறுத்தியிருந்த செயல் பக்தர்கள் மனதைப் புன்படுத்தியது.