வெளியிடப்பட்ட நேரம்: 11:55 (13/01/2019)

கடைசி தொடர்பு:11:55 (13/01/2019)

``நள்ளிரவில் நடை திறக்கக்கூடாது” -திருச்செந்தூர் கோயில் நிர்வாகத்துக்கு இந்து முன்னணி எதிர்ப்பு!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், நள்ளிரவு 1 மணிக்கு கோயில் நடைதிறப்பதற்கு  இந்து முன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

திருச்செந்தூர்

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும், கடற்கரை ஒரத் தலமும் ஆனது திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இங்கு ஆவணித் திருவிழா, மாசித் திருவிழா, கந்த சஷ்டி, தைப்பூசம், வைகாசி விசாகம் என ஆண்டு முழுவதும் பல திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. இதில், ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை நாளன்று பக்தர்களின் தரிசனத்திற்க்காக நள்ளிரவு நடைதிறப்பது வழக்கம்.   இந்த மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு நடை திருக்காப்பிடப்பட்டு வந்தது.

வரும் 15-ம் தேதி செவ்வாய்க்கிழமை தை மாதப் பிறப்பு மற்றும் பொங்கல் பண்டிகை என்பதால், அன்று நள்ளிரவு 1 மணிக்கு நடை திறக்கப்படும் எனவும், தொடர்ந்து  1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிசேகம் மற்றும் தீபாராதனை அதனைத் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும் என திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில், நள்ளிரவில் கோயில் நடை திறப்பதற்கு இந்து முன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்து முன்னணியின் மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்து கோயில்களில் நள்ளிரவிற்கு மேல் கோயில் நடை திறப்பு என்பது ஆகம விதிகளுக்கு எதிரானது. ஆனால், இங்கு ஆங்கிலப் புத்தாண்டு போன்ற விசேச தினங்களில் நள்ளிரவில் கோயில் நடை திறக்கப்படுகிறது. வரும் செவ்வாய்க் கிழமை பொங்கலன்று நள்ளிரவு 1 மணிக்கு நடைதிறக்கப்படும் என திருக்கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. ஆகம விதிகளுக்கு எதிராக நள்ளிரவில் கோயில் நடைதிறக்கக் கூடாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.     

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க