ஒரே நாளில் 20 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சிறை பிடிப்பு! - மீனவர் குடும்பத்தினர் முற்றுகை | SL Navy arrests 20 fishermen in one day

வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (13/01/2019)

கடைசி தொடர்பு:13:00 (13/01/2019)

ஒரே நாளில் 20 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சிறை பிடிப்பு! - மீனவர் குடும்பத்தினர் முற்றுகை

 ராமேஸ்வரம் மற்றும் நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 20 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடித்து செல்லப்பட்டனர். மேலும், இலங்கைக் கடற்படையினர் கப்பல் மோதியதில் ஒரு சில படகுகள் சேதமடைந்த நிலையில் கரை திரும்பின. சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்கவில்லை எனில் தீ குளிப்போம் என மீனவ குடும்ப பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையில் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் குடும்பத்தினர்.

ஜனவரி 1ம் தேதி முதல் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சிறை பிடித்துச் செல்லும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. கடந்த 10 நாள்களில் நாகை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 8 மீனவர்கள் சிறை பிடித்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில் நேற்று புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற ஆனந்தராஜ், விஷ்வா, அஜீத், வினோத்,  ஆனந்த்பாபு, இளங்கோவன்,  ஆகிய 6 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர். இதேபோல் நாகை மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மேலும் 3 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர்.

இந்நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தங்கள் கப்பலைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் சில படகுகள் சேதமடைந்ததால் அவை மீன்பிடிக்க முடியாமல் நேற்று இரவே கரை திரும்பின. இதனிடையே இன்று அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்த தங்கச்சிமடத்தை சேர்ந்த ரைமன் என்பவரது படகினையும் அதில் சென்ற மீனவர்கள்  ரைமன்,  ஜூலியன், அமல், சந்தியாரிச்சர்ட், முனியசாமி, சக்தி, வினோத் உள்ளிட்ட 11 பேரையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர்.

இதனை அறிந்த சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் ராமேஸ்வரம் துறைமுகத்தில் உள்ள மீன் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். நாளை மறுநாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மீன்பிடிக்கச் சென்ற தங்கள் உறவினர்களை சிறைபிடித்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், `சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்கவில்லை எனில் தீ குளிப்போம்’ என எச்சரித்தனர். இதனால் ராமேஸ்வரம் துறைமுகப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.