வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (13/01/2019)

கடைசி தொடர்பு:14:30 (13/01/2019)

மார்ச் 15-ல் கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழா தொடக்கம்! - பக்தர்களுக்கு யாழ்ப்பாணம் ஆயர் அழைப்பு

கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழா  இந்த ஆண்டு மார்ச் 15  மற்றும் 16 தேதிகளில்  நடைபெறவுள்ளது இதில் இந்திய மக்கள் பங்குபெறுவதற்கான விழா அழைப்பினை யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் விடுத்துள்ளார்.

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயம்

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இன்னும் பிரச்சனைக்கு உரிய தீவாக கச்சத்தீவு இருந்துவந்தாலும் அது புனித தீவாக தான் இருநாட்டு மக்களிடையே பார்க்கப்படுகின்றது இதற்கு அங்குள்ள புனித அந்தோணியார் ஆலயமே காரணம்.  இரு நாட்டு மீனவ மக்களின்  பாதுகாவலராகப் போற்றப்படும் அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டுதோறும் பிப்ரவரி அல்லது மார்ச்மாதங்களில் திருவிழா நடைபெறுவது வழக்கம். கச்சத்தீவு அந்தோணியார் கோயிலில் இந்த ஆண்டிற்கான திருவிழா மார்ச் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில்  நடைபெறவுள்ளது.

இந்த விழாவிற்கான முதற்கட்ட பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் நடந்தது. யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர்  ஜஸ்டின் ஞானப்பிரகாசம் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் விழாவில் பங்கேற்கும் இந்திய மற்றும் இலங்கை பக்தர்கள் வருகை தொடர்பாகவும், விழாவை முன்னிட்டு கச்சத்தீவு மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்று சிறப்பிக்குமாறு இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த பக்தர்களுக்கு யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் அழைப்பு விடுத்துள்ளார். இன்னும் சில தினங்களில் கச்சத்தீவு திருவிழாவிற்கான முறையான அழைப்பு ராமேஸ்வரம் பங்கு தந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.