சிகாகோவில் 10வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு! - ஏற்பாடுகள் தீவிரம் | world tamil conference in america

வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (13/01/2019)

கடைசி தொடர்பு:13:30 (13/01/2019)

சிகாகோவில் 10வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு! - ஏற்பாடுகள் தீவிரம்

பத்தாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள சாம்பர்க் கருத்தரங்கு மையத்தில் வரும் ஜூலை மாதம் 4-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை 4 நாள்கள் நடைபெறவுள்ளது. இதை அனைத்துலக தமிழ் ஆய்வு மன்றம், வட அமெரிக்க தமிழ் சங்க பேரவை மற்றும் சிகாகோ தமிழ்ச் சங்கம் ஆகியோர் இணைந்து நடத்துகின்றனர். இதற்கு முன்னதாக இந்த மாநாடு மலேசியாவின் கோலாலம்பூரில் கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்றது. இதுவரை மூன்று முறை தமிழகத்தில் நடைபெற்றுள்ளது. 

தமிழ் மாநாடு

தமிழ்மொழி, தமிழின் தொன்மை, தமிழ் இலக்கியம், தமிழர் கலாச்சாரம் உள்ளிட்டவை குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளது. இந்த மாநாட்டில் அமெரிக்கா, இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து, ஃபிரான்ஸ், கனடா போன்ற பல நாடுகளில் சேர்ந்த 6,000த்துக்கும் அதிகமானவர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர்.மேலும், பல தமிழறிஞர்களும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர். ஜி.யு போப்பின் 200-வது பிறந்தநாளை முன்னிட்டு கீழடி பற்றிய சிறப்பு விவாதமும், கீழடி தொல்லியல் ஆய்வறிக்கையும் இந்த மாநாட்டில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. 

இதுதொடர்பாக உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் ஒருங்கிணைப்பு அமைப்புக் குழுவின் பொறுப்பாளரும் மேற்குவங்க அரசில் கூடுதல் தலைமைச் செயலாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவருமான பாலசந்திரன் ஐ.ஏ.எஸிடம் பேசினோம். ``10-வது உலகத் தமிழர் ஆராய்ச்சி மாநாடு அமெரிக்காவின் சிகாகோவில் முதல்முறையாக நடைபெறவுள்ளது. இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை நடைபெற்றது. அதில் கலந்துகொள்ள தமிழக அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் வந்திருந்தார். அவருடன் உலக தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் துணைத் தலைவர் மற்றும் மூத்த உறுப்பினர்கள் வந்திருந்தனர். 

அவர்கள், உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு உதவ உலக ஆலோசகராக என்னை நியமிக்கவேண்டும் என ஃபட்னா கோரியிருந்ததை ஏற்றுக்கொண்டர். இறுதியாகப் பேசிய அமைச்சர், ‘முன்னதாக நடந்த 9 உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளில் மூன்று தமிழகத்தில் நடந்துள்ளது. அதன் முழு செலவை தமிழக அரசே ஏற்று நடத்தியது. அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் தலைமையின் கீழ் நடந்த ஆட்சியின் போது இந்த மாநாடுகள் நடைபெற்றன. அதேபோல மற்ற நாடுகளில் நடந்த மாநாடுகளுக்கும் தமிழக அரசு உதவியது. தற்போது நடைபெறவுள்ள இந்த மாநாட்டுக்கும் தமிழக அரசு உதவ தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மிகவும் ஆர்வமாகவுள்ளார். 

உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை முன்னிட்டு சிகாகோ நகரில் திருவள்ளுவர் சிலை அமைக்க வேண்டும் என்ற மாநாட்டின் அமைப்பாளர்களின் வேண்டுகோளை ஏற்று சிலைக்கான முழு செலவையும் தானே வழங்குவதாக விஜிபி சந்தோசம் அறிவித்துள்ளார்” இவ்வாறு பேசினார்.