வெளியிடப்பட்ட நேரம்: 15:39 (13/01/2019)

கடைசி தொடர்பு:15:49 (13/01/2019)

`கொடநாடு மர்ம மரணங்களின் பின்னணியில் இருப்பது எடப்பாடி பழனிசாமிதான்!’ - தெஹல்கா முன்னாள் ஆசிரியர்

இந்திய வரலாற்றில் 5 கொலைகளில் தொடர்புடையதாக முதலமைச்சர் ஒருவர் மீது புகார் எழுவது இதுவே முதல்முறை என்று தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் தெரிவித்திருக்கிறார்.

மேத்யூ சாமுவேல்

கொடநாடு எஸ்டேட் மர்ம மரணங்கள் குறித்து தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் டெல்லியில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். எஸ்டேட் கொள்ளையில் தொடர்புடைய 5 பேர் மரணம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகக் கூறியுள்ள அவர், சயன் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோரிடம் எடுத்த பேட்டிகளையும் வெளியிட்டிருந்தார். இதையடுத்து, அந்த விவகாரத்தில் உரிய விசாரணை  நடத்த வேண்டும் என தி.மு.க, அ.ம.மு.க உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இந்த விவகாரத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், பதவி விலகத் தயாரா என்றும் தி.மு.க தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருக்கிறார். 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

வீடியோ தொடர்பாக மேத்யூ சாமுவேல் உள்ளிட்டவர்கள் மீது மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். மேலும், மேத்யூவைக் கைது செய்வதற்காக தனிப்படை போலீஸார் டெல்லி சென்றிருக்கிறார்கள். அதேபோல், சயன் மற்றும் வாளையர் மனோஜ் ஆகியோரைக் கைது செய்யவும் போலீஸார் தீவிரம் காட்டி வருகிறார்கள். இந்தநிலையில், கொடநாடு எஸ்டேட் மர்ம மரணங்கள் பின்னணியில் இருப்பது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் என்று மேத்யூ சாமுவேல் மீண்டும் ஒருமுறை குற்றம்சாட்டியிருக்கிறார்.

இதுதொடர்பாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள மேத்யூ சாமுவேல், ``சென்னை மற்றும் டெல்லியில் உள்ள எனது ஊடக நண்பர்கள் சிலர், என்னைக் கைது செய்வதற்காக தமிழகப் போலீஸார் டெல்லி வந்திருப்பதாகத் தெரிவித்தனர். மேலும், என்னுடைய வீட்டை சோதனையிடவும் அவர்கள் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. அதேபோல், சயன் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோரையும் போலீஸார் கைது செய்ய இருக்கிறார்கள். 

மேத்யூ சாமுவேலின் ஃபேஸ்புக் பதிவு

கொடநாடு மர்ம மரணங்கள் தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைக் குற்றம்சாட்டி நான் வீடியோ வெளியிட்ட விவகாரத்தில், அவர் என் மீது சென்னை போலீஸில் அவதூறு பரப்பியதாகப் புகார் அளித்திருக்கிறார். இந்திய வரலாற்றில் 5 கொலைகளில் தொடர்புடையதாக முதலமைச்சர் ஒருவர் மீது புகார் எழுவது இதுவே முதல்முறை. இந்தசூழலில், அந்தக் கொலைகளின் பின்னணியில் இருப்பது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் என்பதை நான் திட்டவட்டமாகக் கூறிக்கொள்கிறேன்’’ என்று பதிவிட்டிருக்கிறார்.