வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (13/01/2019)

கடைசி தொடர்பு:09:40 (14/01/2019)

மாட்டு வண்டி ஓட்டிய மாவட்ட ஆட்சியர்! - மாமல்லபுரம் சுற்றுலாப் பயணிகளோடு பொங்கல் கொண்டாட்டம்

மாமல்லபுரம் அருகே உள்ள கிராமத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் அவர்களோடு பொங்கல் பண்டிகையை மண்மணத்தோடு கொண்டாடி இருக்கிறார்கள் சுற்றுலாத்துறையினர்.

மாமல்லபுரம் சுற்றுலாப் பயணிகள் பொங்கல் விழா

மாமல்லபுரம் வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பொங்கல் விழாவைக் கொண்டாடும் வகையில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பாகச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. காலை 8.30-க்கு மாமல்லபுரம் சுற்றுலாத்துறை அலுவலகத்தில் 100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பொங்கல் கொண்டாட்டத்துக்குத் தயாராக இருந்தார்கள். அவர்களை மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டிகளில் ஏற்றிக்கொண்டு அர்ச்சுனன் தபசு வழியாக கொக்கிலமேடு கிராமத்துக்கு அழைத்துச் சென்றனர்.

மாமல்லபுரம் சுற்றுலாப் பயணிகள் பொங்கல் விழா

மாட்டுவண்டிகள் கொக்கிலமேடு வந்தடைந்தபோது தாரைத் தப்பட்டை முழங்க அவர்களுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து, பொட்டு வைத்து அவர்களைக் கிராம மக்கள் வரவேற்றனர். கிராமத்தினர் எல்லோரும் விருந்தினர்களுக்கு வணக்கம் வைக்க, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் அதை ஏற்றுத் தலையசைத்து பதிலுக்கு வணக்கம் வைத்தனர். தெருக்கள் முழுவதும் வண்ண வண்ண கோலங்கள், மாவிலைத் தோரணங்கள், மேளதாளங்கள் எனக் கிராம மக்களின் தடபுடல் வரவேற்பில் விருந்தினர்கள் அசந்துபோனார்கள்.

மாமல்லபுரம் சுற்றுலாப் பயணிகள் பொங்கல் விழா

மேளதாளங்கள் முழங்க அவர்களை அருகில் உள்ள அம்மன் கோயிலுக்கு அழைத்துச் சென்று சிறப்பு வழிபாடு நடத்தினார்கள். பிறகு விருந்தினர்களோடு கிராமத்தினரும் சேர்ந்து பொங்கல் வைத்துக் கொண்டாடினார்கள். ‘பொங்கல் செய்வது எப்படி?’ என ஒருவர் ஆர்வமுடன் கேட்க, சுற்றுலாத்துறையினர் அவருக்கு விளக்கமளித்தார்கள். அருகில் உள்ள ஆலமர விழுதில் ஒருவர் தொங்கியபடி ஊஞ்சலாட மற்றவர்களும் அதுபோல் ஆட முயன்றனர். விழுதில் தொங்க முடியாமல் சிலர் கீழே விழ மற்றவர்கள் சிரித்து மகிழ்ந்தார்கள். விருந்தினர்கள் அனைவருக்கும் இளநீர் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சிலர் சேமியா குச்சி ஐஸை வாங்கி ருசித்தனர்.

மாமல்லபுரம் சுற்றுலாப் பயணிகள் பொங்கல் விழா

மியூசிக் சேர், கயிறு இழுத்தல், உறியடித்தல், லெமன் ஸ்பூன் உள்ளிட்ட போட்டிகள் அவர்களின் கொண்டாட்டத்தை இன்னும் அதிகப்படுத்தின. இந்த விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, காஞ்சிபுரம் எம்.பி மரகதம் குமரவேல் உள்ளிட்டோர் அவர்களுடன் சேர்ந்து கொண்டாடினார்கள். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுகளை வழங்கினார்.

மாமல்லபுரம் சுற்றுலாப் பயணிகள் பொங்கல் விழா

பள்ளி கல்லூரி மாணவர்களின் கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட நடன நிகழ்ச்சிகள் அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது. கரகம், காவடி, மேளம் என அனைத்தையும் பெற்றுக்கொண்டு அவர்களே மேளம் இசைத்து கரகாட்டம், காவடியாட்டம் ஆட மற்றவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். கொண்டாட்டங்கள் நிறைவடைந்த நிலையில் அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க காத்திருந்தார் மாவட்ட ஆட்சியர் பொன்னையா. பூட்டிய மாட்டு வண்டியில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஏறிக்கொள்ள அவரே மாட்டுவண்டியை ஓட்ட ஆரம்பித்தார். பிறகு, மாடுகளை விரட்டி வண்டி ஓட்டிக்கொண்டே அவர்களுடன் பேசிக்கொண்டு வந்தார்.

மாவட்ட ஆட்சியர் பொன்னையா, மாமல்லபுரம் பொங்கல் விழா

கொண்டாட்டத்தில் இருந்த சுற்றுலாப் பயணிகள், “நாங்க பலமுறை இந்தியா வந்திருக்கிறோம். பொங்கல் விழாவைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இதுபோன்ற பொங்கலை நாங்கள் கொண்டாடியதில்லை. உறியடிப்பது, கயிறிழுப்பது போன்ற கிராம விளையாட்டுகள் எல்லாம் என்னவென்றே எங்களுக்குத் தெரியாது. பொங்கல் ஓர் உணவு என்பதுதான் எங்களுக்குத் தெரியும். அதை எப்படிச் செய்வார்கள் எனத் தெரியாது. இப்போதுதான் இந்த விழாவைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டோம். தமிழ்நாட்டு கிராமத்தில் அந்த மக்களோடு பொங்கல் கொண்டாடியது வாழ்நாளில் மறக்க முடியாத நாளாகிவிட்டது. தமிழர்கள் விருந்தினரை உபசரிப்பதில் சிறந்தவர்கள் எனச் சொல்வார்கள். நாங்கள் அதை இன்று உணர்கிறோம்” என்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க