வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (13/01/2019)

கடைசி தொடர்பு:14:45 (14/01/2019)

`கைது அல்ல; கடத்தல்!’ - சயன், மனோஜ் விவகாரத்தில் கொதிக்கும் மேத்யூ #KodanadEstate

கொடநாடு கொலைவழக்கில் தொடர்புடைய சையன் மற்றும் மனோஜை காவல்துறையினர் டெல்லியில் வைத்து கைது செய்துள்ளனர். இதைக் கண்டிக்கும் விதமாக தெஹல்கா முன்னாள் ஆசிரியர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேத்யூ

கொடநாடு எஸ்டேட் மர்ம மரணங்கள் குறித்து தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் டெல்லியில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். எஸ்டேட் கொள்ளையில் தொடர்புடைய 5 பேர் மரணம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகக் கூறியுள்ள அவர், சயன் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோரிடம் எடுத்த பேட்டிகளையும் வெளியிட்டிருந்தார். இதையடுத்து, அந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த வேண்டும் என தி.மு.க, அ.ம.மு.க உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இதுதொடர்பாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இந்த விவகாரத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், பதவி விலகத் தயாரா என்றும் தி.மு.க தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருக்கிறார். வீடியோ தொடர்பாக மேத்யூ சாமுவேல் உள்ளிட்டவர்கள் மீது மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். மேலும், மேத்யூவைக் கைது செய்வதற்காகத் தனிப்படை போலீஸார் டெல்லி சென்றிருக்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி

அதேபோல், சயன் மற்றும் வாளையர் மனோஜ் ஆகியோரைக் கைது செய்யவும் போலீஸார் தீவிரம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில் டெல்லியில் கொடநாடு கொலை வழக்கில் தொடர்புடைய சயன் மற்றும் மனோஜ் ஆகிய இருவரையும், சென்னையிலிருந்து டெல்லி சென்ற தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களை விரைவில் சென்னைக்கு அழைத்து வருவார்கள் எனத் தெரிகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக தெஹல்காவின் முன்னாள் ஆசிரியர் வீடியொ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் பேசும் அந்த வீடியோவில், ``நான் சயன், மனோஜ், சிவானி பேசிக்கொண்டிருந்தோம். துவாரகாவிலிருந்து வெளியேறும்போது, ஒரு தனியார் வண்டியில் வந்த காவல்துறையினர், சயன் மற்றும் மனோஜ் இருவரையும் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர். போலீஸ் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வண்டியில் வந்தவர்கள் இருவரையும் கடத்திச் சென்றனர். இது கைது அல்ல கடத்தல். இதற்கு எடப்பாடி பழனிசாமிதான் பொறுப்பு. அவர்கள் எப்படி இருவரையும் கடத்திச் செல்லலாம்? என நாம் கேள்வி எழுப்பியாக வேண்டும். இது முக்கியமானதொரு பிரச்னை” என்று தெரிவித்துள்ளார்.