வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (13/01/2019)

கடைசி தொடர்பு:09:13 (14/01/2019)

`முதல்வர் மீதான குற்றச்சாட்டை சி.பி.ஐ விசாரித்தாலும் சந்திக்கத் தயார்’ - செம்மலை!

``கொடநாடு கொலைச் சம்பவங்கள் தொடர்பாக முதல்வர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. சி.பி.ஐ விசாரணைக்கு வந்தால் அதை நாங்கள் சந்திக்கத் தயார்’’ என்று அ.தி.மு.க அமைப்புச் செயலாளரும் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினருமான செம்மலை இன்று பேட்டியளித்தார்.

முதல்வர் பற்றி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொள்ளுவதற்காகச் சேலம் வந்திருந்தார். சேலம் வரும்போது விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி அளிப்பது வழக்கம். ஆனால், இன்று விமான நிலையத்தில் பேட்டியளிக்காமல், ஓமலூர் கட்சி அலுவலகத்தில் பேட்டி கொடுப்பதாகக் கூறி சென்றார். பிறகு, ஓமலூர் கட்சி அலுவலகத்துக்கு வந்தவர் நேராக அலுவலகத்துக்குள் சென்று நிர்வாகிகளோடு ஆலோசனை மேற்கொண்டார். அதன் பிறகு, வெளியே வந்த செம்மலை பத்திரிகையாளர்களிடம் முதல்வர் பணியில் இருப்பதால் நான் பேட்டி கொடுக்கிறேன் என்று கூறி செம்மலைப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ``தெஹல்கா பத்திரிகை சமூக பத்திரிகை அல்ல. அது பிளாக்மெயில் செய்யும் புலனாய்வு பத்திரிகை.

அந்தப் பத்திரிகை ஆசிரியருக்கு கேரளாவைச் சேர்ந்த கொடூர குற்றவாளிகளுடன் எப்படித் தொடர்பு இருக்கு என்று தெரியவில்லை.  முதல்வருக்கு எதிராகத் திட்டமிட்டு சதி செய்து பொய்யான குற்றச்சாட்டை பரப்புகிறார்கள். அதாவது, ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது கனகராஜ் இவரின் உதவியை நாடி இருப்பதாக சயன் சொல்லி இருக்கிறார். அப்படியானால், ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போது இந்தத் தகவலை சொல்லுகிறார் என்றால் இதில் முதலமைச்சரை எப்படி சம்பந்தப்படுத்த முடியும். அப்போது எங்கே முதலவர் பழனிசாமி அமைச்சராக இருந்தார். இந்த வழக்கு நீதிமன்றத்திற்கோ சி.பி.ஐ-க்கோ வந்தால் சந்திக்கத் தயாராக இருக்கிறோம்.

எடப்பாடி பழனிசாமி


பொங்கல் பரிசு தொகுப்பு பொதுமக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதை முறியடிக்கச் சதி செய்து திட்டமிட்டு அவதூறு பரப்பி வருகிறார். குற்றவாளிகளின் வாக்குமூலம் ஏற்றுக்கொள்ள முடியாது. கற்பனை செய்தியை இட்டுக்கட்டிப் பரப்புகின்றனர். முதல்வர் குறித்து எந்த அவதூறு பரப்பினாலும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பொய் செய்தி பரப்புவோர்களை அ.தி.மு.க வேடிக்கை பார்க்காது. சம்பந்தப்பட்டவர்கள் மீது அவதூறு வழக்கு தொடரப்படும்'' என்றார்.

பேட்டியின்போது பக்கத்து அறையில் அமர்ந்திருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி துண்டு சீட்டில் குறிப்புகளை எழுதி உதவியாளரிடம் கொடுக்க, அந்தக் குறிப்பை பார்த்து செம்மலை பேட்டியளித்தார். இது பத்திரிகையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.