குடிபோதையில் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை - ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யபட்ட காவலர்! | Police transferred because of sexual allegation

வெளியிடப்பட்ட நேரம்: 23:15 (13/01/2019)

கடைசி தொடர்பு:08:58 (14/01/2019)

குடிபோதையில் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை - ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யபட்ட காவலர்!

ஸ்ரீபெரும்புதூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் போதையில் இருந்த காவலர் ஒருவர் அத்துமீறி வீட்டில் நுழைந்து வம்பிழுத்ததால் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பெண்ணிடம் தகராறு செய்த காவலர் பாலாஜி

காஞ்சிபுரம் மாவட்டம், சோமமங்கலம் காவல் நிலையத்தில் முதுநிலைக் காவலராகப் பணிபுரிந்து வருபவர் பாலாஜி. நேற்று இரவு புதுநல்லூர் சோதனைச் சாவடியில் பணியில் இருந்தார். இரவுப் பணியை முடித்து அதிகாலையில் போதையில் அருகில் உள்ள வீட்டுக்குள் புகுந்துவிட்டார். அந்த வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் கையைப் பிடித்து வம்பிழுத்திருக்கிறார். உடனே அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் கூச்சலிட்டார். பெண்ணின் அலறல் சத்தத்தைக் கேட்டு அருகில் உள்ள வீடுகளில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். பாலாஜி வம்பிழுத்ததைக் கண்டதும், அவரைப் பிடித்து அடித்து அங்கேயே உட்கார வைத்தனர்.

உடனே சோமமங்கலம் காவல் நிலையத்துக்குக் கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சோமமங்கலம் காவல்துறையினர் வந்து பாலாஜியை மீட்டுச் சென்றனர். இதைத் தொடர்ந்து அந்தப் பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் ஸ்ரீபெரும்புதூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் தலைமையில் விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டக் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானியின் உத்தரவின் பேரில் பாலாஜி ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகரின் மீது விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க