வெளியிடப்பட்ட நேரம்: 01:19 (14/01/2019)

கடைசி தொடர்பு:08:53 (14/01/2019)

‘வேலூருக்கு அஜித் வருவதாக வதந்தி; ரகளையில் ஈடுபட்ட ரசிகர்கள்!’ - விரட்டியடித்த போலீஸ்

வேலூருக்கு நடிகர் அஜித் வருவதாக வதந்தி பரவியதால், காலையிலிருந்து நள்ளிரவு வரை காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

அஜித் ரசிகர்கள்

அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ திரைப்படம் 10-ம் தேதி வெளியானது. ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடினர். அன்றைக்கு, தமிழகம் முழுவதும் அஜித் ரசிகர்களால் பல்வேறு விபரீத சம்பவங்களும் நிகழ்ந்தன. வேலூரில் உள்ள அலங்கார் தியேட்டருக்குள் இருக்கை பிடிக்கும் தகராற்றில், அஜித் ரசிகர்கள் கத்தி உட்படப் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்டனர். இதில், இருவருக்குக் கத்திக்குத்து விழுந்தது. இச்சம்பவம் தொடர்பாக, அஜித் ரசிகர்களான, ஏற்கெனவே குற்ற வழக்குகளில் தொடர்புடைய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அன்றைய தினமே, வேலூர் அடுத்த காட்பாடி கழிஞ்சூரில் ‘விஸ்வாசம்’ படத்துக்கு டிக்கெட் எடுக்கப் பணம் கொடுக்காத ஆத்திரத்தில் தந்தை பாண்டியன் மீது மகன் அஜித்குமார் தீ வைத்தார். 

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவங்கள், அஜித் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது. இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நடிகர் அஜித் பார்க்க வருவதாக நேற்று (13-ம் தேதி) அதிகாலை தகவல் பரவியது. இதையடுத்து, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை மற்றும் சி.எம்.சி தனியார் மருத்துவமனை முன்பு ரசிகர்கள் திரண்டனர். மருத்துவமனைகளுக்குள் வரும் ஆம்புலன்ஸ் உட்பட வாகனங்களுக்கு வழிவிடாமல் தடுத்தனர். இதனால், நோயாளிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

அஜித் ரசிகர்கள்

இதேபோல், சென்னையிலிருந்து வேலூருக்கு வரும் வழியில் உள்ள வாலாஜாபேட்டை டோல்கேட்டிலும் அதிகளவில் ரசிகர்கள் குவிந்திருந்தனர். டோல்கேட்டுக்கு வந்த சொகுசு கார்களை செல்லவிடாமல் சூழ்ந்துகொண்டு அஜித் இருக்கிறாரா? என்று ரகளையில் ஈடுபட்டனர். இதனால், கார்களில் வந்தவர்கள் எரிச்சலடைந்தனர். நேற்று காலை முதல் நள்ளிரவு 12 மணி வரை காத்திருந்தனர். அஜித் வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. ‘அஜித் வரவில்லை’ என்று போலீஸார் அறிவுறுத்தியும் ரசிகர்கள் கலைந்து செல்லவில்லை.

வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் நள்ளிரவு வரை நோயாளிகளுக்குத் தொந்தரவு கொடுத்தபடி, 500-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கூடியிருந்தனர். ஆம்புலன்ஸ்கள் செல்ல வழிவிடாததால், ஏராளமான போலீஸார் வரவழைக்கப்பட்டனர். மருத்துவமனை வளாகத்திலிருந்து ரசிகர்களை வெளியேறுமாறு போலீஸார் அறிவுறுத்தினர்.

அஜித் ரசிகர்கள்

கலைந்து செல்லாததால், போலீஸார் லத்தி சார்ஜ் செய்து மருத்துவமனைக்குள் இருந்து ரசிகர்களை வெளியே விரட்டியடித்தனர். ரசிகர்கள் நாலாபுறமும் தலைதெறிக்கக் கலைந்து ஓடினர். போலீஸார் நீண்ட தூரத்துக்கு விரட்டிச் சென்றனர். இதனால், சி.எம்.சி மருத்துவமனை பகுதியில் பரபரப்பு காணப்பட்டது. மேலும், இம்மருத்துவமனை அமைந்துள்ள ஆற்காடு சாலையில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

இதுசம்பந்தமாகக் காவல்துறையினர் கூறுகையில், ‘‘இதுபோன்ற குற்ற சம்பவங்களைத் தடுக்க ரசிகர்களுக்கு நடிகர்கள் அறிவுறுத்தல் அறிக்கைகளை அவ்வப்போது வெளியிட வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டனர்.