வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (14/01/2019)

கடைசி தொடர்பு:08:44 (14/01/2019)

நடுக்கடலில் படகு மூழ்கி ராமேஸ்வரம் மீனவர் பலி - இலங்கைக் கடற்படை கப்பல் மோதியதா?

ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற படகு ஒன்று கடலில் மூழ்கியதில் மீனவர் ஒருவர் பலியானார். இலங்கைக் கடற்படை கப்பல் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில் இலங்கைக் கடற்படையினர் இதை மறுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மீனவர்கள்

 

ராமேஸ்வரத்திலிருந்து நேற்று 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்கச் சென்றன. இந்நிலையில் ராமேஸ்வரம் மற்றும் நாகப்பட்டினம், புதுக்கோட்டை பகுதிகளிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 20 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடித்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில், ராமேஸ்வரத்திலிருந்து கருப்பையா என்பவருக்குச் சொந்தமான படகில் முனியசாமி, கார்மேகம், செல்வம், முத்துமாரி ஆகிய 4 மீனவர்கள் பாரம்பர்யமாக மீன்பிடிக்கும் கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். இதே போல் மற்றொரு படகில் 5 மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்துள்ளனர். 

அப்போது அங்கு வந்த இலங்கைக் கடற்படை கப்பல் கருப்பையா படகின் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் படகில் இருந்த 4 மீனவர்களும் கடலில் தத்தளித்துள்ளனர். இதில் கார்மேகம், செல்வம், முத்துமாரி ஆகிய 3 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். மற்றொரு மீனவரான முனியசாமி என்பவர் கடலில் மூழ்கிப் பலியான நிலையில் அவரது உடல் நெடுந்தீவு கடல் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம்  உச்சிப்புளி அருகே உள்ள அகஸ்தியர் கூட்டம் கிராமம் முனியசாமியின் சொந்த ஊராகும்.

இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக இலங்கைக் கடற்படை வெளியிட்டுள்ள செய்தியில், நெடுந்தீவு பகுதியில் ரோந்து சென்றபோது கடலில் மிதந்த மீனவர் உடலை மீட்டதாகவும், மேலும் அப்பகுதியில் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த மீனவர்களை மீட்டதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், இறந்த மீனவர் முனியசாமியின் உடல் அடையாளம் காணப்பட்டு யாழ்ப்பாணம் போலீஸார் வசம் ஒப்படைத்திருப்பதாகவும், கடலில் தத்தளித்த மற்ற மீனவர்களை யாழ்ப்பாணம் போலீஸார் மூலம் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. கடலில் படகு மூழ்கிய சம்பவம் எப்படி நடந்தது என்பது குறித்து யாழ்ப்பாணம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மீனவர்களிடம் விசாரித்த பின்னரே உண்மை தெரியவரும்.