வெளியிடப்பட்ட நேரம்: 02:45 (14/01/2019)

கடைசி தொடர்பு:08:54 (14/01/2019)

`எதிர்க்கட்சிகள் பொய்ப் பிரசாரம் செய்கின்றனர்' - காரைக்குடியில் தேர்தல் பொறுப்பாளர்களுடன் மோடி கலந்துரையாடல்!

சிவகங்கை மாவட்டப் பாராளுமன்ற பா.ஜ.க பொறுப்பாளர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டார்கள்.

மோடி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள பி.எல்.எஸ் மண்டபத்தில் பா.ஜ.க சார்பில் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் பொறுப்பாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் கலந்துரையாடினார். அப்போது, பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா பிரதமரை வரவேற்றுப் பேசியதோடு அவரது பேச்சை தமிழாக்கம் செய்தார்.

சக்தி கேந்திர பொறுப்பாளர் பாலமுருகன், பிரதமரிடம் கடந்த 4 ஆண்டுகளில் வீடில்லாத ஏழைகளுக்கு 1 கோடி வீடுகள் வழங்கியுள்ளீர்கள். இது எப்படி உங்களால் சாத்தியமானது எனக் கேள்வி கேட்டார். அதற்குப் பிரதமர் நரேந்திரமோடி, வணக்கம், பொங்கல் வாழ்த்துகள் எனத் தெரிவித்துவிட்டு பதிலளித்துப் பேசினார்.

மோடி

``10 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் வெறும் 25 லட்சம் வீடுகள்தான் கட்டிக் கொடுக்கப்பட்டன. ஆனால், பி.ஜே.பி அரசின் நான்கரை ஆண்டு ஆட்சியில் 1.25 கோடி வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. வரும் 2022-ம் ஆண்டுக்குள் ஏழைகள் அனைவருக்கும் வீடு என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதே பி.ஜே.பி-யின் கொள்கை. அதற்காகப் பாடுபடுவோம். இதுபோன்று பல்வேறு துறைகளிலும் பி.ஜே.பி செய்த சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்லுங்கள். 

காங்கிரஸ் கட்சியில் உயர் குடும்ப உறுப்பினர்தான் உயர் பதவிக்கு வர முடியும். ஆனால், பி.ஜே.பி-யில் சாமானியர்களும் உயர் பதவிக்கு வர முடியும். பி.ஜே.பி அரசை அனைத்து தரப்பினரும் வரவேற்கின்றனர். ஆனால், எதிர்க்கட்சிகள் மட்டுமே நம்மீது பொய்ப் பிரசாரம் செய்கின்றனர். அதை மக்களோடு சேர்ந்து நாம் முறியடிப்போம்" என்றார். இதேபோல், பெரம்பலூர், தேனி, விருதுநகர், மயிலாடுதுறை, சிவகங்கை ஆகிய 5 தொகுதி தேர்தல் பொறுப்பாளர்களோடு ஆலோசனை நடத்தினார் மோடி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க