வெளியிடப்பட்ட நேரம்: 03:54 (14/01/2019)

கடைசி தொடர்பு:08:27 (14/01/2019)

`தமிழிசை கடின உழைப்பாளி’ - தொண்டர்கள் மத்தியில் பாராட்டிய மோடி!

`எப்போதும் தமிழ் மொழியின் ரசிகன். ஆனால், தமிழ் மொழியை பேசத் தெரியாத துரதிருஷ்டசாலியாக, நான் இருக்கிறேன்' எனப் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மோடி

நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளதை அடுத்து பிரதமர் மோடி தமிழக பா.ஜ.க பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அந்தவகையில் நேற்று மயிலாடுதுறை, பெரம்பலூர், சிவகங்கை, தேனி, விருதுநகர் தொகுதி பா.ஜ.க பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன் பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடினார். கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ``முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்கள் முன்னேற்றத்தையே விரும்புகின்றனர். அவர்கள் வாக்குறுதிகளைவிடச் செயல்பாடுகளையே எதிர்பார்க்கின்றனர். முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்களின் தேர்வு எப்போதும் பா.ஜ.க-தான். அவர்களிடத்தில் பா.ஜ.க-வின் சாதனைகளை, திட்டங்களை எடுத்துரைக்க வேண்டும். ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள் பா.ஜ.க மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர்.

தமிழிசை

மக்களுக்குப் பா.ஜ.க-வுடன் நெருங்கிய தொடர்பு இருப்பது எதிர்க்கட்சிகளுக்குத் தெரியும். அதனால் எதிர்க்கட்சிகளுக்கு வெற்றிக்காகக் கடுமையாகப் போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பா.ஜ.க ஆட்சிக்கு வருவதை மக்கள் விரும்பமாட்டார்கள் எனக் கூறிக்கொண்டிருக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டணி வைப்பதில் ஏன் குழப்பமடைகின்றன? எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கை இல்லையா? பரம்பரைக் கட்சிகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற எண்ணும் வேளையில், மக்களுக்கு அதிகாரத்தை வழங்குவதற்குப் பா.ஜ.க விரும்புகிறது" என்று கூறினார். மேலும், `எப்போதும் தமிழ் மொழியின் ரசிகன். ஆனால், தமிழ் மொழியைப் பேசத் தெரியாத துரதிருஷ்டசாலியாக, நான் இருக்கிறேன். தமிழகத்தில் ஜவுளித்துறையை மேலும் ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.

மோடி

முன்னதாக சிவகங்கை தொகுதியிலிருந்து பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவும் விருதுநகர் தொகுதியிலிருந்து தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும் தொண்டர்களுடன் சேர்ந்து பிரதமர் மோடி உடன் கலந்துரையாடினர். தமிழிசை சௌந்தரராஜன், நேற்று டெல்லியில் நடைபெற்ற பா.ஜ.க கூட்டத்தில் பங்கேற்ற நிலையில், இன்று விருதுநகர் கூட்டத்தில் கலந்துகொண்டார். அவரிடம், `எப்போது தமிழகம் சென்றீர்கள்' என்று விசாரித்த மோடி, `தமிழிசை கடின உழைப்பாளி' எனத் தொண்டர்கள் மத்தியில் பாராட்டு தெரிவித்தார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க