தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - ஒரு நபர் ஆணையத்தின் 7வது கட்ட விசாரணை 22-ம் தேதி தொடக்கம்! | Thoothukudi gun fire incident: Commission to start 7th phase investigations from January 22

வெளியிடப்பட்ட நேரம்: 11:10 (14/01/2019)

கடைசி தொடர்பு:11:10 (14/01/2019)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - ஒரு நபர் ஆணையத்தின் 7வது கட்ட விசாரணை 22-ம் தேதி தொடக்கம்!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாகத் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையத்தின் 7வது கட்ட விசாரணை வரும் ஜனவரி 22-ம் தேதி தொடங்குகிறது.

தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா  ஜெகதீசன்

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தி பொதுமக்கள் கடந்த மே 22-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்புப் போரட்டத்தில் ஈடுபடுவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். அப்போது, திடீரென ஏற்பட்டக் கலவரத்தால் போலீஸார் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இது தொடர்பாக விசாரணை நடத்திட ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையத்தை நியமித்தது தமிழக அரசு. இந்த ஆணையத்துக்கான விசாரணை அலுவலகம் தூத்துக்குடி பீச் ரோட்டில் உள்ள பழைய அரசு சுற்றுலா விருந்தினர் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதே போல, சென்னையிலும் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், பாதிக்கப்பட்டவர்களிடம் இது தொடர்பாகப் பிரமாணப் பத்திரம் பெறப்பட்டது. பின்னர், கடந்த ஜூன் 4-ம் தேதி முதல் ஆணையம் விசாரணையைத் தொடக்கியது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், உடல் உறுப்புகளை இழந்தவர்கள், காயம் பட்டவர்கள், பாதிகப்பட்டவர்கள், இச்சம்பவம் தொடர்பாகப் பிரமாணம் அளித்தவர்கள், உயிரிழந்தவர்களின் உடலை உடற்கூராய்வு செய்த மருத்துவர்கள், சம்பவத்தின்போது பணியில் இருந்த அதிகாரிகள் எனப் பல தரப்பினருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 6 கட்டமாக விசாரணை நடைபெற்றுள்ளது. தொடர்ந்து, 7வது கட்ட விசாரணை வரும் 22-ம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நீதிபதி அருணா ஜெகதீசன், ``துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக இதுவரை 110 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக, 209 ஆவணங்கள்  சரிபார்க்கப்பட்டுள்ளன. குண்டு காயம் அடைந்து சிகிச்சை பெற்றவர்களுக்கு நிவாரணம் வழங்கிட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 7வது கட்ட விசாரணை வரும் 22-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது” என்றார்.  இந்த ஆணையத்துக்கு ஏற்கெனவே கடந்த ஜூன் முதல் செப்டம்பர் வரை 3 மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், மேலும் கூடுதலாக வரும் மார்ச் வரை 6 மாதம்  தமிழக அரசு அவகாசம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.   

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க