வெளியிடப்பட்ட நேரம்: 10:31 (14/01/2019)

கடைசி தொடர்பு:10:49 (14/01/2019)

கொண்டாட்டத்துக்கு வந்தால் ஏமாற்றமே மிஞ்சும்! - வேதனையளிக்கும் வேடந்தாங்கல் நிலவரம்

பொங்கல் விடுமுறைக் கொண்டாட்டத்தின் ஓர் அங்கமாகக் குடும்பத்தோடு சுற்றுலாத் தளங்களுக்குச் சென்று பொழுதைக் கழிப்பது வழக்கமாகிவிட்டது. காணும் பொங்கலன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வேடந்தாங்கல் சரணாலயம் சுற்றுலாப் பயணிகளால் திக்குமுக்காடும். சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் எனச் சுற்றுவட்டார மக்கள் வேடந்தாங்கல் வருவார்கள். தென்மாவட்டங்களில் இருந்தும் ஒருசிலர் வருவார்கள். ஆனால், அவர்கள் எதிர்பார்ப்பதுபோல இந்த வருடம் வேடந்தாங்கல் சரணாலயத்தில் பறவைகளைக் காண முடியாது என்பதுதான் நிதர்சனம்.

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் நவம்பர் மாதத்திலிருந்து பறவைகள் அதிகம் வரத்தொடங்கிவிடும். அப்போதிலிருந்தே சுற்றுலாப் பயணிகளும் வேடந்தாங்கலுக்கு அதிக அளவில் வரத் தொடங்கிவிடுவார்கள். கடந்த சீஸனில் தென்மேற்குப் பருவமழையால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு ஓரளவு நீர்வரத்து இருந்தது. அதுபோல் வடகிழக்குப் பருவமழையும் சராசரி அளவைவிடக் குறைவாகப் பெய்தாலும் ஏரிகள் ஓரளவு நிரம்பியதால் விவசாயப் பணிகள் நடைபெற்றன. இதனால் நத்தைக்கொத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், பெரிய நீர்க்காகம், சிறிய நீர்க்காகம், வக்கான், கூழைக்கடா உள்ளிட்ட 40,000-க்கும் மேற்பட்ட பறவைகள் ஜனவரி மாதத்தில் இருந்தன. ஆனால், இந்த வருடம் தென்மேற்குப் பருவமழை பொய்த்துப்போனது, கஜா புயலுக்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் லேசான மழையே பெய்தது. வேடந்தாங்கல் ஏரியில் தண்ணீர் இல்லாததால் பறவைகள் ஏமாற்றத்துடன் சுற்று வட்டாரத்தில் உள்ள நீர் நிலைகளுக்குச் சென்றுவிட்டன.

வேடந்தாங்கல் ஜனவரி 2018

பறவைகள் குறைவாக வந்திருந்த காரணத்தால் சரணாலயம் திறக்கப்படாமலேயே இருந்தது. ஆனால், சுற்றுலாப் பயணிகள் நிலவரம் தெரியாமல் வேடந்தாங்கலுக்கு வரத் தொடங்கினர். பொதுமக்களின் வற்புறுத்தலால் வேறுவழியின்றி டிசம்பர் 6-ம் தேதி எவ்வித அறிவிப்பும் இல்லாமல் சரணாலயம் திறக்கப்பட்டது.

வேடந்தாங்கல் ஜனவரி 2018

கடந்த ஆண்டு ஜனவரி சீஸன் படங்கள் இவை

வழக்கத்தைவிட இந்த ஆண்டு பறவைகள் மிகக் குறைவான அளவிலேயே இருக்கின்றன. கடந்த வருடம் 40,000-க்கும் மேற்பட்ட பறவைகள் இருந்தன. ஆனால், இந்த வருடம் 2,500-க்கும் குறைவான பறவைகளே தற்போது இருக்கின்றன. சீஸன் தொடங்கியபோது, மழை பெய்யும் என நினைத்து பறவைகள் கூட்டைக் கட்டின. ஆனால், பறவைகள் எதிர்பார்த்த அளவு மழை இல்லை. இதனால் தங்களுக்குப் பாதுகாப்பு இருக்காது எனக் கூடு கட்டிய சில பறவைகளும் கூட்டை கலைத்துவிட்டுச் சென்றுவிட்டன. அதில் குஞ்சு பொரித்த சில பறவைகள் மட்டும்தான் வேறு வழியின்றி சரணாலயத்தில் தற்போது இருக்கின்றன. இந்தப் பறவைகளும் சுற்றுலாப் பயணிகள் வரும்போது இரை தேடச் சென்றுவிடலாம். பறவைகளைக் காண ஆர்வத்தோடு வருபவர்கள் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். காஞ்சிபுரம், செய்யூர், கிழக்குக் கடற்கரை சாலைப் பகுதியில் உள்ள நீர்நிலைகள் எனத் தங்களுக்கு இரை கிடைக்கும் பகுதியில் வேடந்தாங்கல் பறவைகள் தங்கி இருக்கின்றன.

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

இதுகுறித்து வேடந்தாங்கல் வனச்சரகர் சுப்பையாவிடம் பேசினோம். ``இந்த வருடம் பறவைகள் குறைவான அளவிலேயே உள்ளன. பறவைகள் இருந்தாலும் இல்லையென்றாலும் சரணாலயம் வந்தால் கண்டிப்பாக டிக்கெட் பெற வேண்டும். மற்றபடி எவ்வளவு பேர் வந்தாலும் அதைச் சமாளிக்கும் வகையில் நாங்கள் ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்’’ என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க