`என் அப்பாவின் உடலைக் கொண்டுவர உதவுங்கள்!’ - அரசுக்கு மீனவரின் மகள் கண்ணீர் காேரிக்கை | The family requested to bring the fisherman's body to home

வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (14/01/2019)

கடைசி தொடர்பு:13:40 (14/01/2019)

`என் அப்பாவின் உடலைக் கொண்டுவர உதவுங்கள்!’ - அரசுக்கு மீனவரின் மகள் கண்ணீர் காேரிக்கை

ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற படகு ஒன்று கடலில் மூழ்கியதில் மீனவர் ஒருவர் பலியானார். இலங்கைக் கடற்படையினரால் மீட்கப்பட்ட இவரது உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலில் படகு மூழ்கியதால் பலியான மீனவர் முனியசாமி

ராமேஸ்வரத்தில் இருந்து கருப்பையா என்பவருக்குச் சொந்தமான படகில் முனியசாமி, கார்மேகம், செல்வம், முத்துமாரி ஆகிய 4 மீனவர்கள் பாரம்பர்யமாக மீன்பிடிக்கும் கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். இதேபோல் மற்றொரு படகில் 5 மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த இலங்கைக் கடற்படை கப்பல், கருப்பையா படகின் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதனால் படகில் இருந்த 4 மீனவர்களும் கடலில் தத்தளித்துள்ளனர். இதில் கார்மேகம், செல்வம், முத்துமாரி ஆகிய 3 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். மற்றொரு மீனவரான முனியசாமி என்பவர் கடலில் மூழ்கிப் பலியான நிலையில் இவரது உடல் நெடுந்தீவு கடல் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. மீனவர் முனியசாமியின் உடல் இன்று யாழ்ப்பாணம் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது.

மீனவர் முனியசாமி குடும்பத்தினர்

ராமநாதபுரம் மாவட்டம் , உச்சிப்புளி அருகே உள்ள அகஸ்தியர் கூட்டம் கிராமத்தைச் சேர்ந்த முனியசாமி தற்போது இலந்தை கூட்டம் கிராமத்தில் வசித்து வந்தார். முனியசாமியின் மனைவி ஏற்கெனவே இறந்துவிட்டார். இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். முனியசாமி இறப்பு குறித்து அவரின் இளைய மகள் சண்முகபிரியாவுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து ராமேஸ்வரம் மீன் துறை அலுவலகத்துக்கு வந்த சண்முகபிரியா, இலங்கையில் வைக்கப்பட்டுள்ள தன் தந்தை முனியசாமியின் உடலுக்குத் தங்கள் சொந்த ஊரில் இறுதி காரியங்கள் செய்ய வேண்டும். எனவே, இலங்கையில் உள்ள அவரது உடலை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கண்ணீருடன் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

இதனிடையே இலங்கைக் கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களில் பொறியியல் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர் என இருவர் உள்ளனர். எனவே உடனடியாக மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மீனவர்கள் குடும்பத்தினர் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.