வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (14/01/2019)

கடைசி தொடர்பு:14:40 (14/01/2019)

கைதிகளே பயிரிடப்பட்ட கரும்பு... பாளையங்கோட்டை சிறையில் விற்பனை அமோகம்!

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட கரும்புகள் விற்பனை செய்யப்பட்டன. குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டதால் அவற்றை வாங்குவதற்குப் பொதுமக்கள் ஆர்வம் காட்டினார்கள். 

கரும்பு விற்பனை

பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் தண்டனை மற்றும் விசாரணைக் கைதிகள் 1,000 பேர் உள்ளனர். இந்தச் சிறைச்சாலையில் கைதிகளுக்கு வழக்கமான நோட் புக் தயாரிப்பு, பைண்டிங் உள்ளிட்ட பணிகளுடன் கூடுதலாகத் தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன்படி, அல்வா தயாரிப்பு, முருக்கு, சேவு, மிக்சர், இனிப்பு வகைகள் தயாரிப்பு உள்ள தொழில் வாய்ப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. புதிய பிராண்டிங்கில் ரெடிமேட் சட்டை தயாரிப்புத் தொழிலும் சிறைக்கைதிகளால் மேற்கொள்ளப்படுகின்றன.

சிறைச்சாலை வளாகத்திலேயே கைதிகள் தயாரித்த பொருள்களுக்கான விற்பனையகம் நடத்தப்பட்டு வருகிறது. சிறை வளாகத்தில் ஹோட்டல் நடத்தப்பட்டு வருகிறது. நன்னடத்தைக் கைதிகள் மூலம் நடத்தப்படும் இந்த ஹோட்டலுக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது. இது தவிர, சிறை வளாகத்துக்குள் 35 ஏக்கர் பரப்பளவில் இயற்கை விவசாயத்தையும் கைதிகள் மேற்கொண்டு வருகிறார்கள். அதில், வாழை, காய்கறிகள், கீரைகள், நிலக்கடலை, பயறு வகைகள் விளைவிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. பசு வளர்ப்பு, மீன் வளர்ப்பு உள்ளிட்ட பணிகளும் நடக்கின்றன.

பாளையங்கோட்டை சிறை

கைதிகள் மூலம் விளைவிக்கப்படும் இயற்கை விவசாய விளைபொருள்கள் அதே வளாகத்தில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிலையில், பொங்கலையொட்டி சிறை வளாகத்தில் அரை ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. அங்கு விளைவிக்கப்பட்ட கரும்புகள், கைதிகள் அனைவருக்கும் இலவசமாக விநியோகிக்கப்பட்டது. காவல்துறையினருக்கு 10 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.150 என்கிற சலுகை விலையில் விற்கப்பட்டது. பொதுமக்களுக்கு ஒரு கட்டு கரும்பு ரூ.200 என்கிற விலையில் விற்பனை செய்யப்பட்டது. இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்பட்ட கரும்புகளை வாங்கிச் செல்வதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டினார்கள்.